காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பட்டு நெசவு தொழில் செய்து வரும் கணவன், மனைவி இருவரும் அரக்கோணம் அருகே உள்ள ஏரிக்கரையோரம் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் புஞ்சை அரசன் தாங்கள் பகுதியில் பட்டு நெசவு தொழில் செய்து வரும் மாணிக்கம் (52) அவருடைய மனைவி ராணி (45) ஆகியோர் அரை நிர்வாணமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் உடல்களை ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சாலை மின்னல் ஏரிக்கரையில் உள்ள முட்புதரில் இருந்து காவல்துறையினர் சடலமாக மீட்டுள்ளனர்.
காஞ்சிபுரத்தில் பட்டு நெசவு தொழில் செய்துவருபவர் மாணிக்கம். இவர், அரக்கோணம் முன்னாள் வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் மின்னலான் என்பவரின் தங்கை ராணியை திருமணம் செய்துள்ளார். இ இவர்கள் ஒரு மகன் ஒரு மகளுடன் காஞ்சிபுரத்தில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இயங்கி வரும் பைனான்ஸ் நிறுவனத்தில் தனது மகள் திருமணம் மற்றும் மகனுக்காக ரூ.8 லட்சம் வரை கடன் பெற்றதாகவும், கடன் திருப்பி செலுத்த முடியாததால் கடன் கொடுத்தவர்கள் பணத்தைக் கேட்டு மாணிக்கம் மற்றும் அவரது மனைவி ராணி ஆகியோரை கடத்திச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
புஞ்சை அரசன் தங்கள் பகுதியில் இருந்து காஞ்சிபுரத்திற்கு பேருந்தில் வந்த கணவன் மனைவி இருவரும் காஞ்சிபுரத்திலிருந்து சோளிங்கர் மற்றும் அரக்கோணத்திற்கு எதற்காக வந்தார்கள் எதனால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இதற்கிடையே தாய் தந்தையர் இறந்த தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து மகள் சசிகலா (20) மகன் பெருமாள் (22) ஆகியோர் துக்கம் தாங்காமல் இருவரும் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். உறவினர்கள் அவர்களை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலை குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.