முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சொந்தமான கிணற்றிலிருந்து 90 நாட்களுக்கு நீரைப் பயன்படுத்திக் கொள்ள அவர் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம், லட்சுமிபுரத்தில் உள்ள அவருக்குச் சொந்தமான தோட்டத்திலிருக்கும் கிணற்றால் தங்களது குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, கடந்த 20 நாட்களாக கிராம மக்கள் போராடி வந்தனர். பிரச்னைக்குத் தீர்வுகாண்பது தொடர்பாக கிராம மக்களுடன் ஓ.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் நேற்றிரவு தேனி சுற்றுலா மாளிகையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நள்ளிரவு வரை நீடித்த பேச்சுவார்த்தையில், தனது கிணற்று நீரை மூன்று மாதங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள ஓ.பன்னீர்செல்வம் ஒப்புக்கொண்டார். இந்த இடைப்பட்ட காலக்கட்டத்தில் புதிய குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த கிராம மக்களிடம் பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார். இதன் விளைவாக லட்சுமிபுரம் கிராம மக்கள் போராட்டத்தை தற்காலிகமாக முடித்துக் கொண்டுள்ளனர்.