ஆறுமுகசாமி ஆணையம் மருத்துவக் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளவேண்டும் என அப்போலோ நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், அவர் சிகிச்சை பெற்ற சென்னை அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களிடமும் விசாரணை நடத்தியது. அப்போது ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. சிகிச்சை முறைகள் குறித்து நன்கு அறிந்த 21 மருத்துவர்கள் கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அந்த மனுவை நிராகரித்த உயர்நீதிமன்றம், மருத்துவர் குழு அமைக்கத் தேவையில்லை என்று உத்தரவிட்டது. இதைத் தொடரந்து, அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்கள், விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைக்கு ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியது.
மருத்துவர்கள் ரவிச்சந்திரன், மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட மருத்துவர்கள், டெக்னிஷியன் காமேஷ், காசாளர் மோகன் ரெட்டி ஆகியோர், வரும் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அதில் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அப்போலோ நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதனால் அப்போலோ மருத்துவர்கள் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று ஆஜராகவில்லை.