ஆமக விதிப்படி முறையாக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக நியமனம் - தமிழக அரசு தகவல்

ஆமக விதிப்படி முறையாக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக நியமனம் - தமிழக அரசு தகவல்
ஆமக விதிப்படி முறையாக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக நியமனம் - தமிழக அரசு தகவல்
Published on

முறையாக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கடலூர் மாவட்டம் மணவாளநல்லூரில் உள்ள கொளஞ்சியப்பர் கோவிலில் ஆகம விதிமுறைகளை மீறி அர்ச்சகரை நியமிக்கும் அறிவிப்பாணையை ரத்து செய்து, ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்க உத்தரவிடக் கோரி, அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க பொதுச்செயலர் பி.எஸ்.ஆர்.முத்துக்குமார் சார்பாக வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், ஆகம விதிகளை பின்பற்றி தான் அர்ச்சகர்கள் நியமிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதாகவும், ஆகமவிதிப்படி முறையான பயிற்சி பெறாதவர்களை நியமிப்பது தவறானது எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், அர்ச்சகர் பணிக்கான விண்ணப்பங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது எனவும், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இந்த நிலையில், தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள மேலும் 37 கோவில்களை சேர்த்து மனுத்தாக்கல் செய்த மனுதாரர், அந்த கோவில்களிலும் அர்ச்சகர் நியமனங்களை தடைகோரியிருந்தார்.

இந்த இடையீட்டு மனு மீண்டும் நீதிபதி அனிதா சுமந்த முன் இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அரசு தரப்பில், இதே கோரிக்கையுடன் ஸ்ரீதர் என்பவரால் தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் நிலுவையில் உள்ளதால், இந்த வழக்கை அந்த அமர்விற்கு மாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

அப்போது நீதிபதி, இது போன்ற அர்ச்சகர்கள் எவ்வாறு நியமிக்கபடுகின்றார்கள், முறையாக பயிற்சி அளிக்கபடுகிறதா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தமிழ்நாடு முழுவதும் 6 பயிற்சி மையங்கள் மூலம் முறையாக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக நியமிக்கபடுவதாக தெரிவித்தார்.

இதனையடுத்து சேவா சங்க வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற பதிவுத்துறைக்கு நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com