மின் கட்டண உயர்வு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்த மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அது நடைமுறைக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் மின்கட்டண உயர்வு தொடர்பாக முடிவெடுக்க தடை விதிக்கவேண்டும் என தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கங்கள் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தனி நீதிபதி அமர்வு, தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறையை சேர்ந்தவர் கண்டிப்பாக இருக்க வேண்டும். அவரை நியமிக்கும் மின் கட்டண உயர்வு கோரிக்கை மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்கக்கூடாது. அதே நேரத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தலாம் என உத்தரவிட்டிருந்தார்.
இவ்விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் சார்பில் மீண்டும் ஐகோர்ட் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், தனிநீதிபதி உத்தரவுக்கு தடை விதித்து, மின் கட்டண உயர்வு தொடர்பான தமிழக அரசாணை செல்லும் என பல்வேறு கோரிக்கைகள் கொண்ட உத்தரவை கடந்த மாதம் பிறப்பித்தது.
இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கத்தின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்," மின் கட்டண உயர்வு விவகாரத்தில் தீர விசாரித்து தான் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் இரு நீதிபதிகள் அமர்வு அதனை முழுமையாக ஆய்வு செய்யாமல் தனிநீதிபதி உத்தரவை ரத்து செய்துள்ளது. அதனால் அதற்கு தடை விதித்து நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று தமிழக மின் கட்டண உயர்வு விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தால் எங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டாம் என தமிழக அரசு தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.