செய்தியாளர்: இ.சகாய பிரதீபா
தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், முன்ஜாமின் கோரி கஸ்தூரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,
தனது உத்தரவில், "மனுதாரரின் சர்ச்சைக்குரிய அறிக்கையை கவனமாக பரிசீலித்ததில், மனுதாரர் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு எதிராக எதையும் நேரடியாகக் கூறவில்லை என்பது உண்மைதான். ஆனால், மனுதாரரின் இந்த பேச்சு தெலுங்கு பேசும் அனைத்து மக்களையும் மோசமான வகையில் பேச்சுரிமை எனும் பெயரில் வெறுப்புணர்வை பரப்பவோ அல்லது சமூக மோதல்களை ஏற்படுத்தவோ கூடிய வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
பேச்சு சுதந்திரம் என்பது ஒரு அடிப்படை உரிமை. இது தனிநபர்கள் தங்கள் எண்ணங்களையும், கருத்துக்களையும் வெளிப்படுத்த அதிகாரம் அளிக்கிறது. இருப்பினும் இந்த பேச்சுரிமை எனும் சக்தி பெரும் பொறுப்பையும் கொண்டுள்ளது. சுதந்திரமாகப் பேசும் உரிமையை தவறாகப் பயன்படுத்தக் கூடாது. பேச்சுரிமை எனும் பெயரில் வெறுப்புணர்வை பரப்பவோ அல்லது சமூக மோதல்களை ஏற்படுத்தவோ கூடாது. தனிநபர்கள் மற்றும் சமூகங்கள் மீது நமது வார்த்தைகள் ஏற்படுத்தும் தாக்கத்தை அடையாளம் கண்டுகொள்வது அவசியமானது. நமது வார்த்தைகள் மாற்றத்தை உருவாக்கும், புரிதலை வளர்க்கும் அல்லது அதற்கு மாறாக பிரிவினையையும் பகைமையையும் உருவாக்கும்.
இந்த வழக்கில், தெலுங்கு பேசும் மக்களுக்கு எதிராக மனுதாரர் பேசிய பேச்சு எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது என்பதை பார்க்க வேண்டிய நிலையில் உள்ளது. மனுதாரரின் பேச்சு வெறுப்புப் பேச்சாகவே உள்ளது. மனுதாரரின் பேச்சு சமூக வலைதளங்களில் பரவியுள்ள நிலையில், அது வெடிகுண்டு போல உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு பேசும் மக்களிடையே வன்முறை எழும்போது வெடிப்பதற்காக காத்துக் கொண்டிருக்கும். பொது மேடைகளில் இதுபோன்ற பிரச்னைகளை பேசுவதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். குறிப்பாக சமூக வலைதளங்களில் பேசப்படுபவை நிரந்தர பதிவாகிவிடும்.
மனுதாரரின் கருத்து தெலுங்கு பேசும் மக்களின் உணர்வை மிகவும் புண்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட சமூக பெண்களுக்கு எதிரான பேச்சு என புகார் அளிக்கப்பட்டிருந்தாலும், அவரது பேச்சை உற்று கவனிக்கையில் அது தெலுங்கு பேசும் மக்கள் அனைவரையும் தவறாக கூறியிருப்பது தெரிகிறது. நம்மைப் போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில், ஒரு குறிப்பிட்ட பிரிவினரை அவர்களின் மொழியின் அடிப்படையில் இழிவுபடுத்தும் அல்லது அவமதிக்கும் வகையில் பேசும்போது சகிப்புத்தன்மை பூஜ்ஜியமாக இருக்க வேண்டும்.
மனுதாரர் ட்வீட் செய்ததை படிக்கும்போது, இதுபோன்ற மோசமான மற்றும் மிதமிஞ்சிய கருத்தை தெரிவித்ததற்காக மன்னிப்பு கேட்க உண்மையான முயற்சி மேற்கொண்டதாக தெரியவில்லை. தனது பேச்சை நியாயப்படுத்தவே முயற்சித்துள்ளார். இதுபோன்ற வழக்குகளில், பொது நலனையே நீதிமன்றத்தின் மனதில் கொள்ளும். கற்றவர், சமூக ஆர்வலர் என தன்னைக் கூறிக் கொள்ளும் மனுதாரரின் வாயிலிருந்து வந்துள்ள வார்த்தைகள் மிகவும் இழிவானவை. இதுபோன்ற கீழ்த்தரமான அறிக்கைகள் வெளியிடப்படும் போது நீதிமன்றம் மிகவும் கடுமையாக இருக்க வேண்டும். இல்லையெனில் அது மோசமான முன்மாதிரியை உருவாக்கிவிடும்.
இது போன்ற பிதற்றல்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்ற செய்தியை சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நாம் அனுப்ப வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே, எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகளைத் தடுக்க முடியும். மேலும் இதுபோன்ற பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன்பாக இருமுறை யோசிப்பார்கள்.
இதுபோன்ற கேவலமான மற்றும் தரக்குறைவான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் மீது சட்டத்தின்படி வழக்குத் தொடரப்பட்டால், அதிலிருந்து தப்பிக்க மன்னிப்பு கோருவது இனிமேல் ஏற்றுக் கொள்ளப்படாது என்ற வலுவான செய்தியை நீதிமன்றம் அனுப்ப வேண்டும். இல்லையென்றால் யார் வேண்டுமானாலும் இது மாதிரியான வெறுக்கத்தக்க பேச்சுகளை பேசிவிட்டு அதிலிருந்து தப்பிப்பதற்காக மன்னிப்பு கோரலாம் என்றாகிவிடும். சொல்லப்பட்ட வார்த்தைகள் ஏற்கனவே வில்லில் இருந்து வெளியேறிய அம்பு போன்றவை. அது தனது இலக்கை அடைந்து சேதத்தை ஏற்படுத்திவிட்ட நிலையில், அரை மனதுடன் கோரப்படும் மன்னிப்பு ஏற்கனவே நடந்த சேதத்தை சரிசெய்துவிடாது.
பொது மேடையில் இருந்து ஒரு வார்த்தையை உச்சரிக்கும் போது அனைவரும் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வெறுப்பூட்டும் பேச்சுக்களை பேசினால், அதன் விளைவுகளை அவசியம் எதிர்கொள்ள வேண்டும். ஆகவே, உங்கள் வார்த்தைகளை அக்கறையுடனும் கருணையுடனும் கையாளுங்கள். பிரிவினை மற்றும் வெறுப்பைக் காட்டிலும் புரிதலையும் இரக்கத்தையும் வளர்க்கும் உரையாடல்களை மேற்கொள்வோம். அவ்வாறு செய்வதன் மூலம், பேச்சு சுதந்திரத்தின் உண்மையான சாராம்சத்தை மதிப்போம். ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்திற்கான கருவியாக அதனை பயன்படுத்துவோம்”
என குறிப்பிட்டார். தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.