தமிழகம் முழுவதும் கிருமிநாசினி தெளிப்பு - களத்தில் 7,500 தீயணைப்பு வீரர்கள்

தமிழகம் முழுவதும் கிருமிநாசினி தெளிப்பு - களத்தில் 7,500 தீயணைப்பு வீரர்கள்
தமிழகம் முழுவதும் கிருமிநாசினி தெளிப்பு - களத்தில் 7,500 தீயணைப்பு வீரர்கள்
Published on

தமிழகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் 7,500 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்புப்பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து சுகாதாரத்துறையினரும், காவல்துறையினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினரும் நேற்று முதல் கொரோனா தடுப்பு பணிகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை மெரினாவை அடுத்துள்ள நொச்சிக்குப்பம் பகுதியில் உள்ள குடிசை மாற்றுவாரிய கட்டடங்களில், நோய் தொற்று பரவாமல் தடுக்கும் பணியில் தீயணைப்புத்துறை இயக்குநர் டிஜிபி சைலேந்திரபாபு, இணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து ஈடுபட்டனர். நொச்சிக்குப்பம், சீனிவாசபுரம், பட்டினப்பாக்கம் குடிசை மாற்றுவாரியத்தில் உள்ள 4 அடுக்குமாடிகளின் மேல் பகுதிகளில் உயரமான ஏணிகளைப் பயன்படுத்தி கிருமி நாசினியை தெளிக்கப்பட்டது. சுமார் 54 மீட்டர் உயரமுள்ள ஸ்கைலிப்ட் ஏணிகள் இதற்குப் பயன்படுத்தப்பட்டன.

இதுகுறித்து டிஜிபி சைலேந்திரபாபு புதியதலைமுறைக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்புப் பணியில் 7,500 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தனித்தனி குழுவாக பிரிந்து மாவட்டந்தோறும் ஆட்சியர்கள் மேற்பார்வையில் கொரோனா விழிப்புணர்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர். மொத்தம் 271 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 60 மினி வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் கிருமிநாசினி தெளிப்பு மற்றும் முகக்கவசம் வழங்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்” என தெரிவித்தார்.

சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தீயணைப்பு துறையினர் இந்த பணியை மேற்கொண்டு வருவதாகவும், கோயம்பேடு பேருந்து நிலையம், காய்கறி அங்காடி ஆகிய இடங்களில் கைகழுவுவதன் மூலம் கொரானோ நோயை கட்டுப்படுத்துவது எப்படி என்பது பற்றி தீயணைப்புப்படையினர் தனித்தனி குழுவாக பிரிந்து நடனம் மற்றும் செயல்முறை மூலம் விழிப்புணர்வு அளித்து வருவதாகவும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com