செய்தியாளர்: மோகன்ராஜ்
சேலத்தைச் சேர்ந்த கோரைப்பாய் வியாபாரி, தொழில் ரீதியாக கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக இருந்த சுப்பிரமணியனிடம் அறிமுகமாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் தன்னிடம் பணம் மோசடி செய்ததாக முனுசாமி தற்போது புகார் அளித்ததன் அடிப்படையில் சேலம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சுப்பிரமணியன் மற்றும் அவரது மகள் லாவண்யா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள சமையலர் பணிக்கு ஆட்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாகவும், ஒரு பணியிடத்திற்கு ரூபாய் 3 லட்சம் தொகை வழங்கினால் பணி நியமனம் பெறலாம் எனவும் முன்னாள் அமைச்சர் சுப்ரமணியன் கூறியதாக முனுசாமி தனது புகாரில் தெரிவித்துள்ளார். இதனை நம்பி தனது உறவினர்கள் உட்பட 20 பேரிடம் பணத்தை பெற்று ரூபாய் 65 லட்சம் பணத்தை முன்னாள் அமைச்சரிடம் வழங்கியதாகவும், ஆனால் அவர் கூறியபடி பணி நியமனம் செய்து தரவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
மீண்டும் அவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததை அடுத்து தான் பெற்ற பணத்தில் 25 லட்சம் ரூபாயை மட்டும் திரும்பக் கொடுத்துவிட்டு மீதத் தொகையை வழங்காமல் ஏமாற்றுவதாக முனுசாமி புகார் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் தற்போது சேலம் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.