சுற்றுச்சூழல்துறை அதிகாரி பாண்டியனின் வங்கி லாக்கர்களை திறந்து சோதனை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளது.
சாலிகிரமத்தில் உள்ள சுற்றுச்சூழல்துறை அதிகாரி பாண்டியனின் வீடு மற்றும் சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள அவரது அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 1.37 கோடி பணம், 3 கிலோ தங்க நகைகள், 3 கிலோ வெள்ளிப்பொருட்கள், 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள், சொத்து ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இவை அனைத்தையும் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒப்படைத்தனர். தொடர்ந்து பாண்டியனுக்கு சம்மன் கொடுத்து விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதனிடையே வங்கி லாக்கரில் சொத்து ஆவணங்கள் மற்றும் தங்க நகைகள் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்ததையடுத்து லாக்கரை திறக்க லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக லாக்கர் திறப்பது தொடர்பாக வங்கிகளுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.