சென்னையில் சுவாதி படுகொலை பாணியில், மற்றொரு படுகொலை முயற்சி சம்பவம் நடந்திருப்பது ரயில் பயணிகள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஈரோட்டைச் சேர்ந்த தேன்மொழி என்பவர் சென்னை எழும்பூரில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியபடி, கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் தமிழ்நாடு கூட்டுறவு சார்பதிவாளர் அலுவலகத்தில் தட்டச்சராக பணியாற்றி வருகிறார். அதே மாவட்டத்தைச் சேர்ந்த சுரேந்தர் என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக தேன்மொழியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் தேன்மொழியை திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்தில் தனது பெற்றோருடன் சென்று பெண் கேட்டுள்ளார் சுரேந்தர். ஆனால், தேன்மொழி வீட்டில் அதற்கு சம்மதிக்கவில்லை.
அதன் பிறகு, சுரேந்திரனுடன் பேசுவதை தேன்மொழியும் நிறுத்திக் கொண்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுரேந்தர், தேன்மொழியை படுகொலை செய்யும் திட்டத்துடன் நேற்று சேத்துப்பட்டு ரயில் நிலையத்துக்கு சென்றுள்ளார். இரவு 7.50 மணியளவில் தேன்மொழியுடன் திருமண பேச்சை தொடர்ந்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதாக, அதை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சுரேந்தர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தேன்மொழியை வெட்ட முயன்றுள்ளார். இதில் தேன்மொழியின் முகத் தாடை மற்றும் கை விரல்களில் அரிவாள் வெட்டியதில், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரயில் பயணிகள் அலற ஆரம்பித்துள்ளனர். அதற்குள் யாரும் எதிர்பாராத நேரத்தில் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் சுரேந்தர். இதில் தலையில் காயமடைந்த சுரேந்தர் சென்னை ராஜாஜி மருத்துவமனையிலும், அரிவாள் வெட்டில் காயமடைந்த தேன்மொழி கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இருவருக்கும் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்குள் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த எழும்பூர் ரயில்வே காவல்துறையினர், கொலைப் பற்றிய விசாரணையை தொடக்கினர். பெரும்பாலும், பயணிகள் அதிகம் காணப்படாத சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தாதே இந்த சம்பவம் நிகழ காரணம் என்கின்றனர், அப்பகுதியில் வசிக்கும் மக்கள்.
கடந்த 2016ம் ஆண்டு பட்டப்பகலில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில், அதன் பக்கத்து ரயில் நிலையமான சேத்துப்பட்டில், இரவு நேரத்தில் நடந்திருக்கும் இந்த கொலை முயற்சி சம்பவம் ரயில் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பயணிகள் குறைவாக நடமாடும் ரயில் நிலையங்களில், கண்காணிப்புகளை தீவிரப்படுத்துவதன் மூலமே வருங்காலங்களில் இத்தகையை துயர சம்பவங்கள் நிகழ்வதை தடுக்க முடியும் என்கின்றனர் ரயில் பயணிகள்.