பாஜகவின் மற்றொரு முகமாக ரஜினி இருப்பார் என திருமாவளவன் விமர்சனம் செய்த நிலையில், அதற்கு தற்போது தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பதிலளித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு தான் அரசியலுக்கு வருவது உறுதி என தெரிவித்த ரஜினி, அதன் பின்னர் கட்சி தொடர்பான எந்த தகவலையும் வெளியிடாமல் இருந்தார். இந்நிலையில் அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில் டிசம்பரில் கட்சி பெயர் அறிவிக்கப்படும் என்றும் ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் எனத் தெரிவித்தார்.
ரஜினியின் இந்த நிலைப்பாட்டிற்கு அரசியல் வட்டாரத்தில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி வரும் நிலையில் அண்மையில் பேசிய விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் பாரதிய ஜனதா கட்சியின் நெருக்கடியாலும் அச்சுறுத்தலாலும்தான் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்குகிறார் என்றும் பாஜகவின் மற்றொரு முகமாகவே ரஜினி இருப்பார் என்றும் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பான கேள்வி தமிழக பாஜக தலைவர் எல்.முருகனிடம் வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “ ரஜினி கட்சி ஆரம்பிக்கட்டும் நாங்கள் காத்திருப்போம்.. பொறுத்திருந்து பாருங்கள்” என்றார். அம்பேத்காரின் நினைவுதினமான இன்று கன்னியாகுமரியில் உள்ள அம்பேத்காரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர் இதை தெரிவித்தார்.