கல்யாண் ஜூவல்லரி நிறுவனத்தின் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், கொள்ளையர்கள் பயன்படுத்திய மற்றொரு காரை காவல்துறையினர் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கொள்ளையர்கள் பயன்படுத்திய மற்றொரு கார் மீட்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து கோவை கல்யாண் ஜூவல்லர்ஸுக்கு காரில் கொண்டு வரப்பட்ட 65 லட்சம் மதிப்புடைய 3107 கிராம் தங்க நகை மற்றும் வெள்ளி நகைகள் நேற்று முன் தினம் காருடன் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை வழக்கில் கொள்ளையர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் பணி நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் கொள்ளையர்கள் கடத்தி சென்ற கல்யாண் ஜூவல்லரியின் ஜைலோ கார் மதுக்கரை தென்றல் நகரிலிருந்து நேற்று மீட்கப்பட்டது. காரில் இருந்து நகைகளை மட்டும் எடுத்துக் கொண்டு காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு சென்று இருப்பது விசாரணையில் தெரியவந்தது.இந்நிலையில் கொள்ளையர்கள் வந்த ஸ்கார்ப்பியோ மற்றும் ஆல்டோ கார்களை காவல்துறையினர் தேடிவந்தனர்.
இந்த சுழலில் மதுக்கரை அருகே உள்ள வழுக்குபாறை என்ற கிராமத்தின் அருகில் ஆல்டோ கார் தனியாக நிற்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தனிப்படையினர் ஆல்டோ காரை கைபற்றினர். மேலும் காரில் பதிவாகியுள்ள கொள்ளையர்களின் கைரேகைகளை தனிப்படை போலீசார் பதிவு செய்து வருகின்றனர். மேலும் ஆல்டோ கார் எண்ணை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அந்த கார் சென்னையை சேர்ந்த ஒருவரின் பெயரில் இருந்துள்ளது. அந்த நபரை தொடர்பு கொண்டு தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, காரை வேறு ஒரு நபருக்கு விற்று பலமாதங்கள் ஆகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து காரை வாங்கிய நபரை தொடர்பு கொண்ட போது செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. அந்த எண்ணிற்கு எந்தெந்த எண்களில் இருந்து அழைப்புகள் வந்துள்ளன என்பது குறித்தும், யாருக்கு எல்லாம் அழைத்து பேசப்பட்டுள்ளது என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் சில முக்கிய தடயங்கள் கிடைத்து இருப்பதால் விரைவில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் சிக்குவார்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.