அரசுப்பள்ளியில் சேர்ந்தால் சைக்கிள் இலவசம் என திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த அத்திமாஞ்சேரிப்பேட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
குரு தட்சணை வழங்கி கல்வி கற்றது கடந்த காலம். ஆனால் நிகழ் காலத்தில் மாணவர்களுக்கு உதவிகள் வழங்கி பாடம் கற்பிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் ஆசிரியர்கள். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த அத்திமாஞ்சேரிப்பேட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 850 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் 185 தெலுங்கு மொழி படிக்கும் மாணவர்களும் அடங்கும். தனியார் பள்ளிகள் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில் அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. அதிலும் தெலுங்கு பாடப் பிரிவில் படிப்பவர்கள் வெகுவாக குறைந்து வருகின்றனர்.
இந்நிலையில் 6ஆம் வகுப்பில் தெலுங்கு பிரிவில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க ஏதுவாக அப்பள்ளி தெலுங்கு இடைநிலை ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து அவர்களின் சொந்த செலவிலிருந்து ரூ.4500 விதம் சைக்கிள்கள் வாங்கி 6ஆம் வகுப்பில் சேர்பவர்களுக்கு வழங்க முடிவு செய்தனர். அதன்படி நேற்று பள்ளியில் 6ஆம் வகுப்பு தெலுங்கு பிரிவில் சேர்ந்த இரு மாணவர்களுக்கு அப்பள்ளி தலைமை ஆசிரியர் தேவசகாயம் முன்னிலையில் ஆசிரியர்கள் சைக்கிள்கள் வழங்கினர். இது குறித்து இடைநிலை தெலுங்கு ஆசிரியர்கள் கூறுகையில் அத்திமாஞ்சேரிப்பேட்டை சுற்றுவட்டார கிராம பகுதிகளிலிருந்து வந்து படிக்கும் மாணவர்களுக்கு போதிய போக்குவரத்துவசதி இல்லாத நிலையில் படிப்பு தொடர முடியாத நிலை உள்ளது.
மேலும் சிலர் தனியார் பள்ளிகளுக்கு அனுப்பும் நிலை இருப்பதால், கிராம பகுதிகளிலிருந்து வரும் மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள் வழங்கினால் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்ற நோக்கோடு சைக்கிள் இலவசமாக வழங்கி வருகிறோம் என்று தெரிவித்தார்.