கன்னியாகுமரியை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் நாகர்கோவிலில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தை தாக்கிய ஒகி புயலால் ஏற்பட்ட இழப்புகள் ஏராளம். குறிப்பாக புயலின் போது கடலுக்கு சென்றிருந்த மீனவர்கள் இன்று வரை கரை திரும்பவில்லை. அவர்களை மீட்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கன்னியாகுமரியை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர். சமீபத்தில் புயல் பாதித்த கன்னியாகுமரி பகுதியை பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆகியோர் நேரில் சென்று பார்த்தனர்.
இந்நிலையில், ஓகி புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும், குமரியை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தியும் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. விஜயதாரணி, ராஜேஷ்குமார், பிரின்ஸ், சுரேஷ் ராஜன், ஆஸ்டின் என ஐந்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மீனவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், போராட்டத்தில், கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் இறங்கு தளம், அதிவிரைவு கப்பல் தளம் ஆகியவை அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.