கோவை கொடீசியா வர்த்தகவளாகத்தில் ஜவுளி, நகை, ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்புகளை சேர்ந்தவர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனும் கலந்துகொண்டார்.
இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தொழில் அமைப்பினர் தங்களது கோரிக்கைகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தெரிவித்தனர். அந்தவகையில், தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவரும் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளருமான சீனிவாசன், உணவுகளுக்கு தனித்தனி ஜிஎஸ்டி இருப்பதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து சுட்டிக்காட்டினார். அப்போது, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உணவகத்துக்கு வரும்போதெல்லாம் சண்டையிடுவதாகவும் தெரிவித்திருந்தார்.
அந்த வீடியோ வைரலான நிலையில், அவர் ஜனரஞ்சகமாக பேசியதாகவும், தவறு ஏதும் இல்லை எனவும் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதுடன், பலரும் அதற்கு ஆதரவு தெரிவித்து கருத்துகளைப் பதிவிட்டனர்.
இதையடுத்து, ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜக எம்எல்ஏ வானதி ஆகியோரை சந்தித்து பேசிய வீடியோ வெளியானது. அதில், அவர் மன்னிப்பு கேட்டதும் தெரியவந்தது.
அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள பலரும், ‘அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தொழிலதிபர் சீனிவாசன், எழுந்து நின்று ஏன் மன்னிப்பு கேட்டுள்ளார்? அந்தளவுக்கு அவர் என்ன தவறு செய்தார்? கேள்வி கேட்டால், நிலைமையை சொன்னால் குற்றமா என்ன?’ எனக்கூறி கருத்துகளைப் பதிவிட்டு மீண்டும் வைரலாக்கினர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அன்னபூர்ணா உணவக நிர்வாகம் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "செப்டம்பர் 11-ல் நிதி அமைச்சர் உடனான உரையாடல் வைரல் ஆனதால் சொந்த விருப்பத்தின் பேரிலேயே அன்னபூர்ணா உரிமையாளர் அவரைச் சந்தித்தார்.
ஜிஎஸ்டி குறித்து பேசியது தொடர்பான விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறோம். தனிப்பட்ட முறையில் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.
தவறுதலாக வெளியான வீடியோவுக்காக தமிழ்நாடு பாஜக வருத்தம் தெரிவித்தது. தொழில் அமைப்புகளுக்கான குறைதீர் கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கு நன்றி. அனைவரும் இந்த விவகாரத்தில் கொண்டுள்ள தேவையில்லாத அனுமானத்தையும், தவறான அரசியல் புரிதலையும் கைவிடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. அன்னபூர்ணா உணவகத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் மக்களுக்கு நன்றி” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பாதாளச் சாக்கடையில் மூழ்கிய கார்... வெள்ளத்தில் இருவர் உயிரிழப்பு