உசிலம்பட்டியில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலைபோட அனுமதி மறுத்த இன்ஸ்பெக்டரை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒருவிரல் காட்டி எச்சரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாஜக சார்பில் தேனியில் நடைபெறும் முல்லைப் பெரியாறு மீட்பு போராட்டத்தில் கலந்து கொள்ள செல்லும் வழியில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், பி.கே.மூக்கையாத் தேவர் சிலைகளுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை மாலை அணிவிக்க நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர்.
இதையடுத்து காரை விட்டு இறங்கிய அண்ணாமலையை, உசிலம்பட்டி இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் முன் அனுமதி பெறவில்லை என அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. பின்பு மீண்டும் காரில் ஏறி புறப்பட தயாரான நிலையில், கட்சி நிர்வாகிகள் அவரை கண்டிப்பாக தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.
இந்நிலையில், காரை விட்டு இறங்கிய அண்ணாமலை இன்ஸ்பெக்டரை பார்த்து ஒரு விரல் காட்டி என் கட்சிக்காரரை மிரட்டாதீர்கள் என எச்சரித்து விட்டு தேவர் சிலைக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி, போலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டும் தொனியில் ஒருவிரல் காட்டி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.