செய்தியாளர்: ஆவடி நவீன்
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக சென்னை போரூரை அடுத்த காரம்பாக்கம் பகுதியில் மகளிர் சங்கமம் என்ற பெயரில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அங்கு அண்ணாமலை பேசியபோது, “மத்திய அரசின் ஆட்சிக்கு அச்சாணியாக இருப்பவர்கள் பெண்கள். பெண்களை மையப்படுத்தியே பிரதமர் மோடி திட்டங்களை தீட்டி வருகிறார். மோடி தாயை நேசித்தவர். அதனால்தான் பெண்களை ஒவ்வொரு இடத்திலும் முன்னிலைப்படுத்தி வருகிறார். பெண் குழந்தைகளுக்கு திட்டம், கர்ப்பிணிகளுக்கு திட்டம் கொண்டு வந்தவர் மோடி. 100 சதவீதம் வீடுகளில் கேஸ் சிலிண்டர் திட்டம் கொண்டு வந்தார். இந்தியாவில் 10 ஆண்டுகளில் 11 கோடி கழிப்பறைகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்படும் வீடுகள் பெண்கள் பெயரில் கட்டப்பட்டது. கனிமொழி, கீதா ஜீவன், தமிழச்சி தங்கபாண்டியன் போன்றவர்கள் பதவிக்கு வருவதற்காக நாங்கள் அரசியலில் இல்லை. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பதவிக்கு வரவேண்டும் என்பதற்காக பாடுபடுகிறோம். திமுகவில் அவர்களின் குடும்பத்தினருக்கு சீட்டு கொடுப்பார்கள். பாஜகவில் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு சீட்டு கிடைக்கும்.
சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6,000 ரூபாய் கொடுத்தது பிரதமர் மோடிதான். அந்த பணத்தை போட்டு கொடுத்த 50 பைசா கவரும் 5 ரூபாய் மஞ்சப்பையும்தான் இவர்கள் (மாநில அரசை குறிப்பிட்டு) கொடுத்தது. பிரதமர் தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்த திட்டங்களை, தாங்களே கொண்டுவந்ததாக சொல்லிக்கொள்கிறார்கள்.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 400 சீட்டா 450 சீட்டா என்பது தமிழக மக்களின் கைகளில் உள்ளது. நம்முடைய வேட்பாளர் பெயர் நரேந்திர மோடி. யார் வேட்பாளர் என்றாலும் அது மோடிக்கு அளிக்கும் வாக்கு. மோடி வாக்கு கொடுத்தால் கண்டிப்பாக செய்வார்.
தமிழகத்தில் நடக்கும் ஆட்சி எங்கே போகுதென்றே தெரியவில்லை. ஊருக்கு போகவேண்டும் என்றால் பஸ்ஸ்டாண்டக்கு போகவேண்டும். ஆனால் பஸ்ஸ்டாண்டக்கு போக வேண்டும் என்றால் ஊருக்கு போவது போல இருக்கு கிளாம்பாக்கம் செல்வது.
தமிழச்சி தங்கபாண்டியனை எங்கே போய் பார்ப்பது? துணிக்கடை திறப்பு விழாவில் மட்டுமே பார்க்க முடியும். தயாநிதி மாறன் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு டீ கூட வாங்கிக் கொடுக்கவில்லை. சென்னையில் உள்ள திமுக எம்பிக்கள் அனைவரும் வாரிசு அடிப்படையில் வந்தவர்கள். பாஜகவில் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு சீட்டு வழங்குவோம்” என்று பேசினார்