செய்தியாளர்: மோகன்ராஜ்
பாரதிய ஜனதா கட்சி சார்பில் சேலத்தில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்...
“மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு வெளியிடப்பட்ட மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டு அதில் உள்ள அனைத்து அம்சங்களையும் திமுக அரசு மாநில கல்வி கொள்கை என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.
இது வேடிக்கையானது. ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் வழங்குவது வரவேற்கத்தக்கது. இதில் யாரும் அரசியல் செய்யக் கூடாது. குழந்தைகளுக்கு ஊட்டசத்து மிக்க, புரதச்சத்து மற்றும் சிறு தானியங்களை வழங்குவதை வரவேற்கிறோம். இத்திட்டத்திற்கு தேவையான நிதியை வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது. திமுக அரசு இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நீட் தேர்வு விவகாரத்தில் அரசியல் செய்யக் கூடாது. இதில் ஏற்பட்ட குளறுபடி சிறிய அளவிலானது. இதை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. தேசிய தேர்வு முகமை நீட் தேர்வை மட்டுமல்ல பல்வேறு தேர்வுகளையும் நடத்தி வருகிறது. நீட் தேர்வை பொறுத்தவரை, கடந்த 10 ஆண்டுகளில் நீட் தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் பயனடைந்தனர் என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். நீட் தேர்வு வருவதற்கு முன்பு 10 ஆண்டுகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் எத்தனை பேருக்கு வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்தும் அறிக்கை வெளியிடப்பட வேண்டும்.
பகுஜன் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டபோதும், அதை தூண்டி விட்டவர்கள் யார், பணம் வழங்கியவர்கள் யார் என்பதை கண்டறிய வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கூலிப்படையினரை கைது செய்தது மட்டும் போதாது. முழுமையான விசாரணை வேண்டும் என்பதற்காகவே சிபிஐ விசாரணை கேட்கிறோம்.
எங்களுக்கு நேர் எதிரான கொள்கை கொண்டிருந்தாலும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் சிபிஐ விசாரணை கேட்கிறார். இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு நான் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் உள்துறை அமைச்சகம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.
2019-ம் ஆண்டு பிஎம் கிசான் திட்டத்தில் 43 லட்சம் விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அதனை 21 லட்சம் பேராக தமிழக அரசு குறைத்து விட்டது. மத்திய அரசுக்கு விவசாயிகள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்பட வேண்டும் என்பதற்காக திமுக அரசு இதுபோல செயல்படுகிறது. விவசாயிகளை நீக்கியதைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் சட்டமன்றத் தொகுதி வாரியாக விவசாயிகள் குறை தீர்க்கும் முகாம் நடத்தி மனுக்கள் பெறப்படும். அந்த மனுக்களைக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் போராட்டம் நடத்தப்படும்.
தமிழகத்தில் 4,372 அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை. 19,000 அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால், தமிழக அரசு இதைப்பற்றி எல்லாம் கவலைப்படுவதே இல்லை” என்றார்.