மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 39 தொகுதிகளையும் முழுமையாக கைப்பற்றியது. பாஜக தான் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவியது. அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரிடம் தோற்றார்.
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் இன்று முதன்முறையாக செய்தியாளார்களைச் சந்தித்த அண்ணாமலை, “தேசிய ஜனநாயகக் கூட்டணி தேசிய அளவில் வெற்றி பெற்று, பண்டிட் நேருவுக்கு பிறகு மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பொறுப்பேற்க உள்ளார். வாக்கு வங்கி அதிகமாகியிருப்பது ஒரு வகையில் வெற்றி.
எங்கள் சரித்திரத்திலேயே வாங்காத வாக்குகளை பாஜக கோவையில் வாங்கியிருக்கிறது. கோவையில் அதிமுக நூலிழையில் டெப்பாசிட்டை காப்பாற்றியிருக்கிறார்கள். கோவையில் 10க்கு 9 எம் எல் ஏ அதிமுக கொண்டுள்ளது. கோவை அதிமுகவின் கோட்டை என உங்களுக்கு தெரியும். அங்கு கணிசமாக வாக்குகள் பெற்றதை நாங்கள் சாதனையாகப் பார்க்கிறோம்.
2026ல் பாஜக ஆட்சியைப் பிடிக்கும். அதுதான் எங்களின் இலக்கு. கொரோனாவிற்குப் பிறகு உலகில் எந்த கட்சியும் ஆட்சியை தக்கவைக்கவில்லை. ஆனால் கொரோனாவிற்குப் பிறகும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்கவைத்து கொண்டுள்ளோம்.
எனக்கு கொடுக்கப்பட்ட வேலை கட்சியை வளர்ப்பதுதான். இன்னொருத்தருடன் அனுசரணையாக இருப்பது என் வேலை அல்ல. நாளைக்கு காலை தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கவேண்டும் என்ற நோக்கம் எங்களுக்கு இல்லை. அது நடக்காது என்பது எங்களுக்கும் தெரியும். இன்னும் ரொம்ப தூரம் போக வேண்டும்.” என்று பேசியுள்ளார்.