மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் இன்று காலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். சாலிகிராமத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் அவரது உடலுக்கு நேரடியாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வரும் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். ராஜாஜி அரங்கில் விஜயகாந்த் உடலை வைக்க முதல்வர் ஏற்பாடு செய்ய வேண்டும்.
நாளை மக்கள் இங்கு அதிகம் கூடுவார்கள். ஏற்பாடுகள் முறையாக இல்லையென்றால் அசம்பாவிதங்கள் ஏற்படக் கூடும். தேசிய தலைவர்களும் அஞ்சலி செலுத்த வர உள்ளனர். எனவே ராஜாஜி அரங்கை இந்த அரசு வழங்க வேண்டும். அவரது உடலை அடக்கம் செய்ய அரசு இடம் வழங்க வேண்டும். அதில் ஒரு மணிமண்டபமும் கட்டித் தர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் கருணாஸ், “மனித நேயத்தின் முழு உருவம் என்று சொன்னால் அது விஜயகாந்த் தான். ஒட்டுமொத்த சினிமா உலகிலும் அன்பையும் மரியாதையையும் போற்றக்கூடியவராக, அனைவரிடத்திலும் உரிமை எடுத்துக்கொள்ளக்கூடியவராக, ஒட்டுமொத்த மக்கள் மீதும் பேரன்பு கொண்ட மனிதரை நாம் இழந்துள்ளோம்.
இந்நிகழ்வில் கலந்துகொள்ளக்கூடிய எங்களைப் போன்றவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது. பெரும் கூட்டம் வரக்கூடிய இந்நேரத்தில் தமிழக அரசு மிக நேர்த்தியாக கையாண்டு இருக்க வேண்டும். ஏன் வந்தோம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது மிகவும் வேதனை அளிக்கிறது.
நடிகர் சங்கத்துணைத் தலைவராக நான் மாநில அரசுக்கு வைக்கக்கூடிய கோரிக்கை கேப்டன் உடலை ராஜாஜி அரங்கில் வைத்து பொதுமக்களை காண் வைக்க வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்” என தெரிவித்தார்.