என் மண் என் மக்கள் நடைபயணத்தின் போது ஸ்ரீரங்கத்தில் பேசிய அண்ணாமலை, “திமுக ஆட்சியை கடந்த 30 மாதகாலமாக பார்த்து வருகிறோம். அனைத்து மதத்திற்கும் எதிரான ஆட்சியாக திமுக உள்ளது. அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 1967ல் ஒரு பலகையை வைத்துள்ளார்கள். கடவுளை நம்புபவன் முட்டாள், ஏமாளி என்று வைத்துள்ளார்கள். இந்துக்கள் நாம் அமைதியான முறையில் அறவழியில் நம் வாழ்க்கையை வாழ்கிறோம். ஸ்ரீரங்கத்தில் இருந்து பாஜக உறுதி எடுத்துக்கொள்கிறது. தமிழகத்தில் பாஜக ஆட்சி வரும் போது முதல்வேலையாக அந்த கம்பத்தை அப்புறப்படுத்துவது. நாயன்மார்கள், ஆழ்வார்களது சிலை வைக்கப்படும். மாறாக கடவுளை நம்புபவன் முட்டாள் என்று சொல்பவர்களது சிலைகளை பாஜக ஆட்சிக்கு வந்த முதல் நொடி அகற்றிக்காட்டுவோம்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று அண்ணாமலை, திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தமது நடைப்பயணத்தை மேற்கொண்டார். காந்தி மார்க்கெட்டில் தமது மூன்றாம் கட்ட நடைப்பயணத்தை நிறைவுசெய்த அவர், அங்கு பாஜக தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
திருச்சியில் உள்ள அமைச்சர்கள் கே.என். நேரு, மகேஸ் பொய்யாமொழி ஆகிய இருவரும் சண்டையிட்டு வருவதாகவும், ஆனால் திருச்சி வளர்ச்சி அடையக்கூடாது என்பதில் இருவரும் ஒற்றுமையாக உள்ளதாகவும் கூறினார். திருச்சியில் ஆட்டோ நகரம், மலைக்கோட்டையில் ரோப் கார் வசதி என அறிவித்த திட்டங்களை எதையும் திமுக நிறைவேற்றவில்லை எனவும் சாடினார்.
மேலும் பேசிய அவர், “பாஜக புதுமையான அரசியலை கையில் எடுக்கின்றோம். அது வளர்ச்சி அரசியல், ஏழைகளின் நலனுக்கான அரசியல், இந்து தர்மத்திற்காக பாடுபட்டவர்களை முன்னிலைபடுத்தி வைக்கக்கூடிய அரசியல். எனில் அந்த சிலையையும், வாசகத்தையும் எங்கு வைப்பீர்கள் என திமுகவினர் கேட்பார்கள்.
சிலையை உடைக்கும் அளவு இங்கு யாரும் கேவலமானவர்கள் கிடையாது. சிலையாக இருந்தாலும் வாசகமாக இருந்தாலும் பொது இடத்தில் அது எங்கு இருக்க வேண்டுமோ அங்கு சென்றுவிடும்” என தெரிவித்துள்ளார்.