“சீனிவாசன் அண்ணனின் தனிப்பட்ட வீடியோ வெளியானதற்கு பாஜக சார்பில் மன்னிப்பு கோருகிறேன்” - அண்ணாமலை

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜக எம்எல்ஏ வானதி ஆகியோரை சந்தித்து தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவரான தொழிலதிபர் சீனிவாசன் மன்னிப்பு கோரிய வீடியோ வெளியானதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருத்தம் கூறியிருக்கிறார்.
சீனிவாசன் வீடியோ - அண்ணாமலை மன்னிப்பு
சீனிவாசன் வீடியோ - அண்ணாமலை மன்னிப்புபுதிய தலைமுறை
Published on

நேற்று தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவரான தொழிலதிபர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜக எம்எல்ஏ வானதி ஆகியோரை சந்தித்து எழுந்து நின்று ‘தயவு செய்து என்னை மன்னிச்சுடுங்க’ என மன்னிப்பு கோரிய வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அந்த வீடியோ வெளியிட்டதற்காக பாஜக சார்பில் அதன் மாநில தலைவர் அண்ணாமலை வருத்தம் கூறியிருக்கிறார்.

இருப்பினும் இந்த மன்னிப்பை திமுக, காங்கிரஸ் ஏற்கவில்லை. ஏன்? என்ன நடந்தது? பார்க்கலாம்...

அண்ணாமலை
அண்ணாமலை

முன்னதாக நேற்று முன்தினம் கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பேசிய கலந்துரையாடல் கூட்டத்தில், உணவுகளுக்கு தனித்தனி ஜிஎஸ்டி இருப்பதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து தொழிலதிபரும், தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவருமான தொழிலதிபர் சீனிவாசன் சீனிவாசன் சுட்டிக்காட்டினார்.

அப்போது குறிப்பாக அவர், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உணவகத்துக்கு வரும்போதெல்லாம் சண்டையிடுவதாக ஜனரஞ்சகமான முறையில் தெரிவித்து இருந்தார். (அந்த காணொளி இங்கே:)

இந்த வீடியோ வைரலான நிலையில், அவர் ஜனரஞ்சகமாக பேசியதாகவும், தவறு ஏதும் இல்லை எனவும் நிர்மலா சீதாராமனே நேற்று மாலை விளக்கம் அளித்தார். அத்துடன், “யார் என்ன கமெண்ட் செய்தாலும் எனக்கு கவலை இல்லை” என்றும் கூறினார் நிதியமைச்சர்.

ஆனால் அத்துடன் பிரச்னை ஓயவில்லை.

நிர்மலா சீதாராமன் பேசிய சில மணி நேரத்திலேயே, சீனிவாசன் தனிப்பட்ட முறையில் அவரை சந்தித்து மன்னிப்பு கோரினார்.

அந்தக் காட்சிப்பதிவில் ஆடியோ சரியாக கேட்கவில்லை என்றபோதும் ‘மன்னிச்சிடுங்க தயவுசெய்து, நான் எந்த Party-யிலும் இல்லை’ என சீனிவாசன் இறுதியில் சொல்வது தெளிவாக தெரிந்தது. இவ்விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட தொழிலதிபர் சீனிவாசனை தொடர்புகொண்டு நாம் கேட்டபோது, அவர் கருத்துக் கூற மறுத்துவிட்டார்.

இதையடுத்து நிர்மலா சீதாராமனை கேள்வி கேட்டதற்காக சீனிவாசனுக்கு மன்னிப்பு கேட்க கோரி அழுத்தம் தரப்பட்டதாக திமுக-வினர் விமர்சித்தனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், “ஜிஎஸ்டி பற்றி கேட்ட கோவை அன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனர் அவமதிக்கப்பட்டிருக்கிறார்; ஜிஎஸ்டி குறித்து கேள்வி கேட்டவரின் பேச்சு ஆணவத்துடன், அவமரியாதையுடன் அணுகப்பட்டுள்ளது தனது கோடீஸ்வர நண்பர் விதிகளை வளைக்க, சொத்துகளை பெற முற்பட்டால் மோடி சிவப்புக் கம்பளம் விரிக்கிறார்; அதிகாரத்தில் இருப்போரின் ஈகோ புண்படுத்தப்பட்டால் அவர்கள் அவமதிப்பார்கள் என்பது கண்கூடாகத் தெரிகிறது” என்று கூறினார்.

இதேபோல சமூக வலைதளங்களில் பலரும், ‘அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தொழிலதிபர் சீனிவாசன், எழுந்து நின்று ஏன் மன்னிப்பு கேட்டுள்ளார்? அந்தளவுக்கு அவர் என்ன தவறு செய்தார்? கேள்வி கேட்டால், நிலைமையை சொன்னால் குற்றமா என்ன?’ எனக்கூறி கருத்துக்களை பதிவிட்டனர்.

மன்னிப்பு கேட்ட தொழிலதிபர் சீனிவாசன்
மன்னிப்பு கேட்ட தொழிலதிபர் சீனிவாசன்pt web

இதையடுத்து சம்பந்தப்பட்ட வீடியோவில் நிர்மலா சீதாராமன், சீனிவாசனுடன் இருந்த கோவை எம்.எல்.ஏ வானதி, பாஜக தரப்பு விளக்கத்தை வெளியிட்டார். அதில் அவர், “அன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனர் சீனிவாசன் எனக்கு தொடர்ச்சியாக போன் செய்தார்; ‘நான் தப்பாக பேசிவிட்டேன்; அமைச்சரிடம் மன்னிப்பு கேட்பதற்கு நேரம் கொடுங்கள்’ என்று கேட்டார். இதையடுத்து ஹோட்டலுக்கு வந்த சீனிவாசன், ‘நான் பேசியது தவறு, தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிட்டேன்; உங்கள் மனது புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்தார். அவரிடம் அமைச்சர், ‘உங்கள் தொகுதி எம்.எல்.ஏ... அதுவும் பெண் எம்.எல்.ஏ என்ன சாப்பிடுகிறார் என்பதை இப்படியா பொதுவெளியில் சொல்வீர்கள்’ என கேட்டார். உடனே சீனிவாசன், என்னிடம் மன்னிப்பு கோரி நான் அவருக்கு சகோதரி போல” என்றார். இருப்பினும் பிரச்னை பூதாகாரமாக கிளம்பியது. காரணம், மன்னிப்பு கோரும் அளவுக்கு சீனிவாசன் சொன்ன விஷயம் தவறானதா என்ற கேள்வி எல்லோருக்கும் இருந்தது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட அந்த வீடியோ வெளியானதற்காக, பாஜக சார்பில் அதன் மாநில தலைவர் அண்ணாமலை தற்போது வருத்தம் கோரியுள்ளார். தன் எக்ஸ் தளத்தில் இதுபற்றி பதிவிட்டுள்ள அவர், “மரியாதைக்குரிய வணிக உரிமையாளருக்கும், மதிப்பிற்குரிய நிதியமைச்சருக்குமான உரையாடல் தொடர்பான தனிப்பட்ட உரையாடல் காணொளியை பொதுவெளியில் வெளியிட்ட கட்சி நிர்வாகிகளுக்காக தமிழ்நாடு பாஜக சார்பில் மன்னிப்பு கோருகிறேன்.

இந்த எதிர்பாராத தனியுரிமை மீறலுக்கு சீனிவாசன் அவர்களுக்கு அலைபேசியில் அழைத்து, நானே வருத்தம் தெரிவித்துள்ளேன்.

அன்னபூர்ணா சீனிவாசன் அண்ணன், தமிழ்நாட்டின் வணிக சமூகத்தின் தூணாக இருக்கிறார். மாநில மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அவர் அளித்து வருகிறார். இந்த விவகாரத்தை உரிய மரியாதையுடன் முடித்து வைக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்” என்றுள்ளார்.

இருப்பினும் திமுக தரப்பில் வழக்கறிஞர் சரவணன், “அவர் (சீனிவாசன்) பேசியதில் தவறே இல்லை. ஆனால் மன்னிப்பு கேட்கிறார் என்றால் அவர் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார் என்றே புரிந்துகொள்ள வேண்டி உள்ளது. அவர் ஏன் மன்னிப்பு கேட்கவேண்டும் என்பதே எங்கள் கேள்வி. நிர்மலா சீதாராமனை இதேபோல வடநாட்டவர் ஒருவரும் பேசி இருக்கிறார். அந்த காணொளி கூட இணையத்தில் வைரலானதுதான். ஆனால் இப்போதுவரை அவரெல்லாம் மன்னிப்பு கேட்கவில்லை. தமிழர் என்பதால் இவர் மன்னிப்பு கோர கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார் என்றே தெரிகிறது” என்றார். இதையடுத்து, இவ்விஷயம் தமிழ்நாடு அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com