செய்தியாளர் - சே.விவேகானந்தன்
தருமபுரியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “தருமபுரி சாதாரண மண் அல்ல. அதியமான் மன்னர்கள், அவ்வையார் வாழ்ந்த பகுதி. தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டம் தொழில் வளர்ச்சி குறைந்த மாவட்டம். இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்தியா முழுவதும் சென்று கடுமையான வேலை செய்து வருகிறார்கள். இந்த மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் சாதியை பிரதானமாக வைத்து அரசியல் செய்து கொண்டு வருகிறார்கள்.
தருமபுரி - மொரப்பூர் ரெயில் பாதையை பயன்பாட்டிற்கு கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. உழைப்பு, கல்வி ஆகியவற்றில் முன்னேற்றம் இருந்தாலும் தருமபுரி மாவட்டம் சாதி அரசியலால் வளர்ச்சியில் பின்னோக்கியே சென்று கொண்டுள்ளது. பிரதமர் மோடி நம்புவது விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் என்ற 4 சாதிகளை மட்டும்தான். இதில் ஏழை என்ற நிலை இனிமேல் இருக்கக் கூடாது என்பதற்காக மோடி பாடுபட்டு வருகிறார்.
பாரத மாதா அனைவருக்கும் பொதுவானவர். 2024 ஆம் ஆண்டு மீண்டும் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி அமைந்த உடன் பாப்பாரப்பட்டியில் பாரத மாதா கோவில் கட்டப்படும். ரூ.775 கோடி மதிப்பில் தொப்பூரில் பறக்கும் சாலை திட்டம் அமைக்கப்பட உள்ளது. 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை முதல் 5 ஆண்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசு ஏழ்மையை போக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியது.
2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை இரண்டாவது ஐந்தாண்டில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டது. ஊழல் என்ற அரக்கன் இந்தியாவின் வளர்ச்சியை தடுத்ததால் 2014 ஆம் ஆண்டு இந்தியா உலக அளவில் 11-வது பெரிய பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடாக இருந்தது. ஆனால் தற்போது இந்தியா 9 ஆண்டுகளில் உலகில் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்துள்ளது. பாரத பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 2028-ல் உலகின் 3வது பொருளாதாரமாக நாடாக வளர்ச்சி அடையும். அதுதான் வளர்ச்சி அடைந்த பாரதமாக அமையும்.
2014 ஆம் ஆண்டு ரூ.86 ஆயிரமாக இருந்த தனிநபர் வருமானம் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் தற்போது ரூ.1 லட்சத்து 96 ஆயிரமாக உயர்ந்ததுள்ளது. 1965-ல் தருமபுரியில் இடைத்தேர்தல் நடந்தது. அப்போது பெரியார் விடுதலை பத்திரிகையில் ‘தருமபுரி வாக்காளர்களே உஷார். திமுக கூட்டு சதி என்று திமுகவினரை கலககாரர்கள்’ என்று எழுதினார். அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வடிவேல் வெற்றி பெற்றார். தற்போது அவருடைய பேரன் திமுகவின் எம்.பி.யாக உள்ளார்.
தமிழக அரசு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை சரியாக செயல்படுத்தவில்லை. இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் சரியான திட்டமிடல் இல்லை என சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது. இதனால் ஒரு நபருக்கு சராசரியாக கிடைக்க வேண்டிய 40 லிட்டர் குடிநீரில் 26 லிட்டர் மட்டுமே கிடைக்கிறது. இந்த நிலையில் 2-வது திட்டத்திற்கு ரூ.4500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளனர். காவிரி உபரி நீர் திட்டத்தை தருமபுரி மாவட்டத்தில் செயல்படுத்தினால் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களுக்கு போதிய சாலை வசதிகள் இல்லை. பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் மூலம் சாலைகள் அமைப்பதற்கு மத்திய அரசு தயாராக இருந்தும், மாநில அரசு சாலை அமைப்பதற்கு தயாராக இல்லை” என்று பேசினார்.