அண்ணா பல்கலைக்கழகத்தில் பருவத் தேர்வுக்கான கட்டணம் 50 சதவீதம் உயர்த்தப்பட்டது. இளநிலை பருவத்தேர்வு மற்றும் செயல்முறை தேர்வுக்கான கட்டணம், தாள் ஒன்றுக்கு 150 ரூபாயிலிருந்து 225 ரூபாயாக மாற்றி அமைக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள், 50 சதவீத தேர்வுக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
இதன் எதிரொலியாக, அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதன் துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், 10 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டண உயர்வு நூறு சதவீதம் இருந்திருக்க வேண்டும் என்றும், அதிக செலவு காரணமாகவே 9 ஆண்டுகளுக்கு பின்னர் தேர்வு கட்டணத்தை 50 சதவீதமாக அதிகரித்ததாகவும விளக்கினார்.
வரும் பருவத் தேர்வுக்கு பழைய கட்டணத்தையே வசூலிக்க உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தியதாக துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார்.
ஏற்கெனவே தேர்வுக் கட்டணத்தை செலுத்திய மாணவர்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறிய அவர், அனைத்து பல்கலைக்கழகத்திலும் ஒரே மாதிரியான தேர்வுக் கட்டணத்தை வசூலிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட இருப்பதாக தெரிவித்தார்.