பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள்| 129 பேருக்கு அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு!
பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு 129 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள், பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்தவர்களை அங்கீகரித்து பாராட்டும் வகையில், ஒவ்வொரு ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளன்று முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 129 பேருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தூத்துக்குடியில் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்த 448 பேரை தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டனர். மிகுந்த சவாலுக்கு இடையே பொதுமக்களை மீட்ட எஸ்.மந்திரமூர்த்தி மற்றும் ராமச்சந்திரன் ஆகிய வீரர்களின் துணிச்சலான செயலை பாராட்டி தமிழக முதலமைச்சரின் தீயணைப்பு பணிக்கான அண்ணா வீரதீர பதக்கம் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டார்.
இந்த விருதுகள் பிறிதொரு நாளில் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.