5 எஸ்பி-கள் உட்பட 100 போலீசாருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக காவல் துறையில் சிறப்பாக பணிபுரியும் காவல் துறையினருக்கு ஆண்டு தோறும் அண்ணா பிறந்த நாளன்று அண்ணா விருது வழங்கி தமிழக அரசு கவுரவிக்கிறது. அதன்படி டிஎஸ்பிக்களுக்கு ரூ. 15 ஆயிரம் மற்றும் பதக்கமும், காவல் ஆய்வாளர்களுக்கு ரூ. 10 ஆயிரமும் ரொக்கப்பரிசாக வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு 5 எஸ்பிக்கள் உள்பட 100 போலீஸ் அதிகாரிகள் அண்ணா விருது பெற உள்ளனர். அது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், 'சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையர் பகலவன், நாமக்கல் காவல்துறை எஸ்பி சரோஜ் குமார் தாகூர், காஞ்சிபுரம் எஸ்பி சுதாகர், திண்டுக்கல் எஸ்பி சீனிவாசன், சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் மீனா ஆகிய 5 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் விருதுநகர் குழந்தைகள், பெண்கள் குற்றத்தடுப்புப் பிரிவு ஏடிஎஸ்பி மாரிராஜன், மதுரை போலீஸ் பயிற்சி பள்ளி ஏடிஎஸ்பி மணி, திருப்பூர் நகர நுண்ணறிவுப்பிரிவு உதவிக்கமிஷனர் ராதாகிருஷ்ணன், வடக்கு மண்டல ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு டிஎஸ்பி ரவிந்திரன், திருவண்ணாமலை டிஎஸ்பி அண்ணாதுரை, சென்னை கொரட்டூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், நெல்லை உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் மனோகரன், ராணிப்பேட்டை போக்குவரத்துப் பிரிவு முகேஷ்குமார் உள்பட 100 போலீஸ் அதிகாரிகள் அண்ணா பதக்கம் பெற உள்ளதாக' அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.