ஆம்ஸ்ட்ராங் கொலையில் இருக்கும் மர்மங்கள்; யார் இந்த பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை? சிக்கியது எப்படி?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை கைது செய்யப்பட்டுள்ளார். அவர், காவல்துறையினரிடம் சிக்கியது எப்படி?.. அவரிடம் நடத்தப்படும் விசாரணை என்ன?.. என்பதை விரிவாக பார்க்கலாம்.
அஞ்சலை
அஞ்சலைpt web
Published on

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஒவ்வொரு நாளும் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

சமீபத்தில், இந்த கொலை வழக்கில் முக்கிய நபராக சேர்க்கப்பட்டவர் பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை. வடசென்னையில் கஞ்சா வியாபாரியாக வலம் வந்த இவர், மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி. அஞ்சலை, தனது கணவரின் கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் வகையில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய பண உதவி செய்து கொடுத்தது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது. அஞ்சலை மீது கட்டப்பஞ்சாயத்து, கந்து வட்டி, கொலை முயற்சி உட்பட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை - சரணடைந்தவர்கள்
ஆம்ஸ்ட்ராங் படுகொலை - சரணடைந்தவர்கள்pt web

ஆம்ஸ்ட்ராங் கொலையில் அவருக்கு முக்கிய பங்கு இருந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. அஞ்சலை தலைமறைவாக இருந்து வந்த நிலையில், அவரை தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

குறிப்பாக, தமிழக -ஆந்திர எல்லையோரப் பகுதிகளில் தேடுதல் வேட்டை நடைபெற்றது. இந்தநிலையில்தான் அவர் சென்னையிலேயே தலைமறைவாக இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னை ஓட்டேரி பகுதியில் தனது நண்பரின் இல்லத்தில் தலைமறைவாக இருந்த அஞ்சலையை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய யாருக்கு எவ்வளவு பணத்தை வழங்கினார்?, மொத்தம் எவ்வளவு பணம் கைமாறியது?, ரவுடி சம்போ செந்திலுக்கு உள்ள தொடர்பு என்ன? என்பது தொடர்பாக அஞ்சலையிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி, மலர்க்கொடி, சதீஷ், ஹரிஹரன் உள்ளிட்ட 14 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் திருவேங்கடம் காவல்துறை என்கவுன்டரில் உயிரிழந்தார். மலர்க்கொடி, சதீஷ், ஹரிஹரன் ஆகிய 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக, இந்த 3 பேரின் பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளிகள் யார்? யார்? என்பதைக் கண்டறியும் வகையில் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மூவரிடமும் விசாரணை மேற்கொண்டால் ரவுடி சம்போ செந்தில் மற்றும் தற்போது சிறையில் இருக்கும் வட சென்னையின் பிரபல தாதா ஒருவருக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் என்ன சம்பந்தம் உள்ளது என்பதை கண்டுபிடிக்க முடியும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com