“டாக்டர் எஸ்.அனிதா எம்.பி.பி.எஸ்” - படத்திற்கு தடைகோரி அனிதா தந்தை வழக்கு

“டாக்டர் எஸ்.அனிதா எம்.பி.பி.எஸ்” - படத்திற்கு தடைகோரி அனிதா தந்தை வழக்கு
“டாக்டர் எஸ்.அனிதா எம்.பி.பி.எஸ்” - படத்திற்கு தடைகோரி அனிதா தந்தை வழக்கு
Published on

நீட் தேர்வினால் மருத்துவ கனவு கலைந்த மாணவி அனிதாவின் பெயரில் எடுக்கப்படும் டாக்டர் எஸ்.அனிதா எம்.பி.பி.எஸ். படத்திற்கு தடைகோரி அவரது தந்தை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நீட் தேர்வின் காரணமாக எம்.பி.பி.எஸ். சேறுவதற்கான இடம் கிடைக்காமல் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி தற்கொலை செய்துக்கொண்டவர் அரியலூர் மாணவி அனிதா. 

அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமம் பெரியார் நகரை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகள் அனிதா. இவர் கடந்த 2017ஆம் ஆண்டு 12ஆம் வகுப்புக்கான அரசுப் பொது தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றார். ஆனால் மருத்துவ இடங்களுக்கான நீட் தேர்வில் அவர் போதிய தகுதி மதிப்பெண்ணை பெற முடியவில்லை. இதனால் நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் மருத்துவ இடம் கிடைக்கவில்லை.இதனால் மனமுடைந்த அனிதா தனது வீட்டில் 2017 செப்டம்பர் 1ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அனிதாவின் தற்கொலை நாடு முழுவதும் பேசப்பட்டதுடன், பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. மேலும், பல்வேறு அரசியல் கட்சிகள் நீட் தேர்வுக்கு எதிராக போராடுவதற்கான விதையை தூவியவர் அரியலூர் அனிதா. 

அப்படிப்பட்ட அனிதாவின் பிறந்தநாளன்று, ஆர்.ஜே.பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் "டாக்டர் எஸ்.அனிதா எம்.பி.பி.எஸ்." என்ற படத்தை எடுக்க அறிவித்து போஸ்டர் வெளியிட்டது. அந்த போஸ்டரில், ஸ்டெதஸ்கோப் அணிந்த அனிதா தாமரை மலரில் அமர்ந்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டிருந்து.அனிதாவை கௌரவபடுத்தும் வகையில் எடுக்கப்படும் இந்தப் படத்தில் அனிதா வேடத்தில் ஜல்லிக்கட்டு புகழ் ஜூலி நடிப்பதாகவும், அஜய் என்கிற அஜய்குமார் படத்தை தயாரித்து இயக்குவதாகவும் முடிவு செய்யப்பட்டு பட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், தனது மகள் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு படத்தை இயக்குனர் அஜய் என்கிற அஜய்குமாரோ அல்லது அவரை சார்ந்தவர்களோ படமெடுக்கவோ, விளம்பரப்படுத்தவோ தடை விதிக்க வேண்டுமென அனிதாவின் தந்தை சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் இயக்குனர் அஜய் 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென உத்தரவிடவும் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சண்முகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், படத்தின் இயக்குனர் அஜய் தங்களுடைய கிராமத்திற்கு வந்ததில்லை என்றும், அனிதாவின் வாழ்க்கை பற்றி எந்தக் குறிப்பும் இல்லாத தன் மகள் பெயரை தவறாக பயன்படுத்துவதாக வாதிட்டார்.

அனிதாவின் தியாகத்தையும், போராட்டத்தையும் வைத்து பணம் சம்பாதிக்கும் நோக்கில் இத்திரைப்படம் உருவாகி வருதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார். பின் வழக்கு குறித்து தயாரிப்பாளரும் இயக்குனருமான அஜய்குமாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com