மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் உடல் நேற்று நள்ளிரவு ஆயிரக்கணக்கானோரின் கண்ணீர் அஞ்சலியுடன் தகனம் செய்யப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா 12ஆம் வகுப்பில் 1176 மதிப்பெண்கள் பெற்றும் நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ படிப்பை பெற முடியவில்லை என்ற எண்ணத்தில் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தமிழகம் முழுவதும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்த நிலையில், முக்கிய மாவட்டங்கள் அனைத்திலும் போராட்டங்கள் நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் உடன் படித்த தோழிகள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்களும் திரண்டனர். மலர் மரியாதை மற்றும் அஞ்சலியை தொடர்ந்து, ஆயிரக்கணக்கானோர் சிந்திய கண்ணீர் வெள்ளத்துடன் நடைபெற்றது அனிதாவின் இறுதி ஊர்வலம்.
பொதுமக்களுடன் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோரும் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று மரியாதை செலுத்தினர். முன்னதாக மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார். இதேபோன்று டிடிவி தினகரனும் அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இவ்வாறு பலத்த போலீஸ் பாதுகாப்போடு நடைபெற்ற அனிதாவின் இறுதி ஊர்வலம், சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை சென்றது. அப்போது ஊர்வலத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மக்களும் நீட் தேர்வைத் தடை செய்ய வேண்டுமென்ற முழக்கங்களுடன் சென்றனர். பின்னர் அனைவரது மனமும் பலத்த கனமுடன் உருக, கனவுகளுடன் இறந்த அனிதாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.