தமிழக அரசின் நிதியைப் புறக்கணித்த அனிதாவின் பெற்றோர்
தமிழக அரசு அறிவித்த ரூ.7 லட்சம் நிதியை வாங்க மாணவி அனிதாவின் பெற்றோர்கள் மறுத்துவிட்டனர்.
மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் உடல் நேற்று நள்ளிரவு ஆயிரக்கணக்கானோரின் கண்ணீர் அஞ்சலியுடன் தகனம் செய்யப்பட்டது. அனிதாவின் உடலுக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் உடன் படித்த தோழிகள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காலை முதல் இரவு வரை அஞ்சலி செலுத்தினர்.
பொதுமக்களுடன் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோரும் அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதோடு இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், தமிழக அரசு அறிவித்த ரூ.7 லட்சம் நிதியை வழங்க மாவட்ட ஆட்சியர் லட்சுமி, அனிதா வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால், நிதியை வாங்க மாணவி அனிதாவின் குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். நீட் தேவை ரத்து செய்யும் வரை நிதியுதவியை பெற மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். மாவட்ட ஆட்சியரின் சமாதானப்படுத்தும் முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
முன்னதாக மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதியுதவியும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ரூ.1 லட்சம் நிதியுதவியும் வழங்கினர்.