காரைக்கால் கடற்கரையில் கொத்துக்கொத்தாக இறந்து கரை ஒதுங்கும் மான்கள்

காரைக்கால் கடற்கரையில் கொத்துக்கொத்தாக இறந்து கரை ஒதுங்கும் மான்கள்
காரைக்கால் கடற்கரையில் கொத்துக்கொத்தாக இறந்து கரை ஒதுங்கும் மான்கள்
Published on

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் கடற்கரையில் தொடர்ந்து உயிரிழந்த நிலையில் மான்கள், நரி, பறவைகள் உள்ளிட்ட விலங்குகள் கொத்துக்கொத்தாக இறந்து கரை ஒதுங்கி வருகின்றன. 

பெ‌யருக்கு ஏற்ப யானை பலத்துடன் நாகை, தஞ்சை, திரு‌வாரூர் என 6 மாவட்டங்களை புரட்டிப்போட்டுச் சென்றிருக்கிறது கஜா புயல். கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டாலும், அதிக பாதிப்புக்கு உள்ளான இடம் வேதாரண்யம். ‘கஜா’ புயலின் கோரத்தாண்டவத்தில் சின்னாபின்னமான வேதாரண்யத்தில் காணும் இடமெல்லாம் மரக்கிளைகள், மின் கம்பங்களும் சாய்ந்துகிடக்கின்றன. ‘கஜா’ புயலால் சுமார் 10 ஆயிரம் மின்கம்பங்களும், சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களும் சாய்ந்திருக்கின்றன. வேதாரண்யத்தில் வேரோடு தென்னை மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. கடுமையான புயலால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.


ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ‘கஜா’ புயலின் வேகத்தில் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்திருக்கின்றன. மேலும் நிறுத்தப்பட்டிருந்த பல விசைப்படகுகள் காணவில்லை என்றும் மீனவர்கள் கூறுகின்றனர். வேதாரண்யத்திலிருந்து கோடியக்கரை, அகஸ்தியம்பள்ளி உள்ளிட்ட 30 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கஜா புயல் காரணமாக வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை விலங்குகள் சரணாலயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கோடியக்கரை சரணாலயத்தில் வசிக்கும் மான்கள், குதிரைகள், வெளிநாட்டு பறவைகள், காட்டுப்பன்றி, மாடுகள் என விலங்கினங்களும் அதிக அளவில் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் காரைக்காலையடுத்த பட்டினச்சேரி முதல் வாஞ்சூர் வரையிலான கடற்கரை பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட மான்கள், காட்டு பன்றிகள், குதிரைகள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன. 

மேலும் கருக்கலாச்சேரி கடற்பகுதியில் இருந்து கோட்டுச்சேரி கடற்கரை வரையில் குவியல் குவியலாக மான்கள், நரிகள், காட்டு பன்றிகள் மற்றும் வெளிநாட்டுப்பறவைகள் செத்து கரை ஒதுங்கியுள்ளன. தகவலறிந்த மாவட்ட நிர்வாகம் கரை ஒதுங்கிய விலங்குகளை நகராட்சி ஊழியர்களை கொண்டு கடற்கரை ஓரத்தில் குழிதோண்டி புதைத்தனர். மேலும் விலங்குகள் கரை ஒதுங்கிய இடத்தில் தொற்று நோய் வராமல் இருக்க மருந்துகள் தெளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com