கடந்த மாதம் 4ஆம் தேதி 35 வயது மதிக்கத்தக்க பிரதிப் சிங் என்ற இளைஞர் கோவையில் மரணமடைகிறார். அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடக்கிறது. அதே நாளில் அவரது உடல் மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மயானத்தில் எரியூட்டப்படுகிறது. எல்லாம் முடிந்து பல வாரங்களுக்குப் பிறகுதான் பிரேதப் பரிசோதனைக்கு அளிக்கப்பட்ட ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்தும் போலியானவை எனத் தெரியவருகிறது. பிரதிப் சிங் என்ற பெயரில் சாம்பலாக்கப்பட்ட உடலுக்குச் சொந்தக்காரர் இலங்கையை அச்சுறுத்தி வந்த லசந்தா பெரேரா என்ற அங்கட லொக்கா.
பெரிய புலியின் வாலைப் பிடித்திருப்பது அதிகாரிகளுக்கு அப்போதுதான் புலப்படுகிறது. ஏனென்றால் அங்கட லொக்கா என்ற பெயர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கைக் காவல்துறையைக் கலங்க வைத்த பெயர்களில் ஒன்று.
மேலை நாட்டுத் திரைப்படங்களில் வருவதைப் போல, வெவ்வேறு வழிகளில் போதைப் பொருள்களைக் கடத்தியவர். கழுகைப் பயன்படுத்துவது அவற்றுள் முதன்மையானது. கழுத்து முழுவதும் நகைகள், குறுந்தாடி என தாதாவுக்கான அலங்காரத்துடன் சுற்றி வந்தவர் அங்கட லொக்கா. 2017-ஆம் ஆண்டு தனது சகா ஒருவரைக் கொன்றதற்குப் பழி வாங்குவதற்காக சிறை வாகனத்தில் வைத்து 7 பேரைச் சுட்டுக் கொன்றவர். கோவையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, மதுரையில் எரிக்கப்பட்டது இலங்கையை அச்சுறுத்திய தாதாவின் உடல் என்று தெரிந்த பிறகு, ஒன்றன்பின் ஒன்றாக அதிர்ச்சியளிக்கும் விவரங்கள் வெளிவரத் தொடங்கின.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்குத் தப்பிவந்த அங்கட லொக்கா சென்னை, பெங்களூரு, மதுரை, கோவை எனச் சுற்றி வந்திருக்கிறார். மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்களான சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் ஆகியோர் ஆவணங்கள் தயாரிக்கவும், தங்குவதற்கும் உதவியிருக்கிறார்கள்.
தாதா அடையாளத்தை மறைத்து சாதுவான இளைஞராக தனது கெட்டப்பை மாற்றி, பிரதிப் சிங் என்ற பெயரில் நடமாடியிருக்கிறார் அங்கட லொக்கா. அவருடன் இலங்கையைச் சேர்ந்த ஆமானி என்ற பெண்ணும் தங்கியிருந்திருக்கிறார். தற்போது ஆமானி கருவுற்றிருப்பதாகவும், அதிக அளவு கருக்கலைப்பு மாத்திரைகளை உட்கொண்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது.
மூன்று ஆண்டுகளாக இந்தியாவில் தங்கியிருந்த அங்கட லொக்கா என்னென்ன குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கிறார், நல்ல உடல்நலம் கொண்ட அவர் இறந்தது எப்படி, அவரது உடல் அவசர அவசரமாக எரிக்கப்பட்டது ஏன், கடந்த மாதத்திலேயே அங்கட லொக்கா இறந்துவிட்டதாக இலங்கை ஊடகங்களில் செய்தி வெளியானது எப்படி என்பன போன்ற கேள்விகளுக்கு சிபிசிஐடி முதல் ‘ரா’ உளவு அமைப்பு வரையிலும் விடை தேடிக் கொண்டிருக்கின்றன.