ஆந்திராவைச் சேர்ந்த சுதீர் தேசிய அளவிலான பாடிபில்டர் போட்டியில் 2 மெடல்களை வென்றுள்ளார்.
ஆந்திர மாநிலம் பல்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 23 வயது இளைஞர் சுதீர். இவர் பஞ்சாப்பில் நடைபெற்ற 70 கிலோ எடைப்பிரிவிலான தேசிய அளவிலான பாடிபில்டர் போட்டியில், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். இது சுதீரின் தேசிய அளவிலான முதல் பதக்கமாகும். இதுதொடர்பாக கூறும் அவர், “நான் ஏழைக்குடும்பத்தை சேர்ந்தவன். நான் பாடிபில்டிங் மீது இருந்த ஆர்வத்தில் எனது படிப்பை பாதியிலேயே கைவிட்டேன். இதனால் எனது வீட்டிலிருந்து எனக்கு ஆதரவு மறுக்கப்பட்டது. அத்துடன் நான் பாடிபில்டிங் செய்வதையும் எனது வீட்டில் விரும்பவில்லை. இருப்பினும் நான் தொடர்ந்து பாடிபில்டிங் செய்து, மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தேன். தற்போது தேசிய அளவில் இரண்டு பதக்கங்களை வென்றுள்ளேன்” என்று கூறினார்.
இதற்கிடையே சுதீர் தன்னுடன் படித்த சக மாணவியான அபர்ணா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பாடிபில்டிங் போட்டியில் பங்கேற்ற சுதீருடன் அவரது மனைவியும் வந்திருந்தார். அப்போது பதக்கம் வென்ற கணவருடன் பேசிய அவர், “எனது கணவர் சிறிய கிராமத்தில் இருந்து வந்தவர். அவர் இந்தப் பதக்கத்தை வெல்வதற்கு மிகவும் பாடுபட்டுள்ளார்.” என்று உருக்கமாக அழுதார். அவர்கள் இருவரும் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.