திருவள்ளூர் அருகே, 58 அடுக்குகள் கொண்ட செங்கற்களால் ஆன சங்ககாலக் கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் அதிரம்பாக்கம், குடியம், வடமதுரை, நெய்வேலி, பரிக்குளம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கற்கால வாழ்விடங்கள் உள்ளன. பட்டரை பெருமந்தூர் கிராமத்தில் பல்லவ மன்னர் அபராஜித வர்மன் கால கல்வெட்டுகளும், முதலாம் குலோத்துங்கன் சோழர் கால கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன.
இங்கு 2015 முதல் நடந்துவரும் அகழ்வாய்வுப் பணிகளில் 203 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பழங்கற்காலம், இடைக்காலம், புதிய கற்காலம் சார்ந்த கற்கருவிகள், முதலாம் ராஜராஜ சோழன் கால செப்புக்காசு போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
58 அடுக்குகளைக் கொண்ட செங்கற்களாலான கிணறும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழந்தமிழர் கட்டட கலைக்குச் சான்றாகவும், நீர் மேலாண்மைக்கு உதாரணமாகவும் இந்த கிணறு பார்க்கப்படுகிறது. கீழடி போன்று இங்கும் அகழ்வாராய்ச்சிகளை விரிவுப்படுத்தினால், தமிழரின் தொன்மைக்குச் சான்றான பொருட்கள் கிடைக்கலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்