நெய்வேலியில் நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடைபெறுவதை கண்டித்து அப்பகுதி மக்களுடன் பாட்டாளி மக்கள் கட்சி மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டம் தீவிரமடைந்த நிலையில் அதனை கட்டுப்படுத்த போலீசார் முயற்சித்த போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தின் தீவிரத்தை குறைக்கும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பாமக வரை போலீசார் கைது செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு இடங்களில் பாமகவினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதனிடையே புதிய தலைமுறைக்கு பிரதுயேக பேட்டி அளித்த அன்புமணி ராமதாஸ், “முற்றுகை போராட்டத்தை அமைதியான முறையில் அற வழியில் நாங்கள் நடத்தினோம். எங்களது கடந்த போராட்டங்கள் அனைத்தும் அமைதியாக நடத்தப்பட்டது தான். இங்கிருக்கும் ஆளும் கட்சி அமைச்சர் என்.எல்.சி ஏஜெண்ட் போல் செயல்படுகிறார். இது தமிழ்நாட்டின் பிரச்சனை, சாப்பாட்டிற்கு நாளை பிச்சை எடுக்கப்போகிறோம்” என ஆவேசமாக பதிலளித்தார்.