கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த அன்பு குமரன் என்பவர் கைதுசெய்து அவரிடம் இருந்து செல்போன் மற்றும் 2500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இவருடன் தொடர்பில் இருந்த சட்ட விரோத 3 நம்பர் லாட்டரி கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. கேரளாவில் சட்டபூர்வ லாட்டரி விற்பனை நடைபெற்று வரும் நிலையில் அங்கு பரிசுபெறும் நம்பர்களை வைத்து நாகர்கோவிலில் சிலர் நம்பர் லாட்டரி நடத்தி வருகின்றனர். 20 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை லாட்டரி சீட்டு நம்பர்கள் விற்பனை செய்து, அதன்மூலம் பல ஆயிரம் ரூபாய் சம்பாதித்து வருகின்றனர். இதனை தடுக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டுர்னிமடம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பு குமரன். அப்பகுதியில் குளிர்பான கடை நடத்திவரும் இவர் ரகசியமாக வாட்ஸ்அப் மூலம் நம்பர் லாட்டரி விற்பனை செய்து வந்துள்ளார்.
இது தொடர்பாக, கிடைத்த ரகசிய தகவலின் பெயரில், வடசேரி போலீசார் அன்பு குமரனின் கடைக்குச் சென்று சோதனையிட்டனர். அப்போது அவர் 3 நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது உறுதியானதால் அவரை கைது செய்ததோடு அவரிடம் இருந்து லாட்டரி விற்பனைக்காக பயன்படுத்திய செல்போன் மற்றும் 2500 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? எந்த கும்பல்? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.