தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு ஜனவரி 2 ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்ட பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுடனான மண்டல ஆய்வு கூட்டம் நெல்லையில் தொடங்கியது. இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தின்போது, பள்ளிகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் ஒரே கழிவறையை பயன்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கக் கோரி, நெல்லை பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அமைச்சரிடம் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அனைத்து பள்ளிகளிலும் கூடுதல் கழிவறைகளைக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென கூறினார். பள்ளி மாணாக்கர்கள் பேருந்துகளின் படிக்கட்டுகளில் பயணிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்ட அமைச்சர், அனைத்து பேருந்துகளுக்கும் கதவுகள் அமைப்பது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் பரிந்துரைக்கப்படும் என்றும் கூறினார்.