செய்தியாளர் லெனின்
தவெக மாநாட்டுக்குச் சென்ற அக்கட்சியின் நிர்வாகிகள் விபத்தில் உயிரிழந்த நிலையில், கட்சித் தலைமையில் இருந்து யாரும் இரங்கல் தெரிவிக்கவில்லை என வேதனை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து அக்கட்சியை சேர்ந்த லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டத்திலிருந்தும், மாநகரத்தில் இருந்தும் 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கார், பஸ், வேன் மூலமாக சென்றனர்.
திருச்சியில் இருந்து பேரணியாகச் சென்ற வாகனங்களில் திருச்சி தெற்கு மாவட்டத் துணைத்தலைவர் கலைக்கோவன் சென்ற வாகனம் முதலில் சென்றது. செல்லும் வழியில் நடந்த விபத்தில் கலையும், இளைஞர் அணித் தலைவராக இருந்த சீனிவாசனும் உயிரிழந்தனர். இருவரது உடல்களும் பிரேத பரிசோதனை முடிந்து திருச்சி உறையூரில் இருந்த அவர்களது வீடுகளுக்கு கொண்டு வரப்பட்டது.
கலையின் இறப்புச் செய்தி மாநாடு தொடங்குவதற்கு முன்பே வந்துவிட்டாலும், மாநாட்டில் அவர்களும் எவ்விதமான இரங்கலும் தெரிவிக்கவில்லை, அறிக்கைகள் கூட வெளியிடவில்லை என்ற ஆதங்கத்தை அவர்களது உறவினர்கள் வெளிப்படுத்தினர்.
இதுதொடர்பாக அவர்களது உறவினர்கள் பேசியதாவது, “சின்ன பிள்ளையாக இருந்ததில் இருந்து விஜய் ரசிகராகவே இருந்தார். விஜய்க்காக எவ்வளவோ செலவும் செய்துள்ளார். விஜய்யும் அரசியலுக்கும் வந்துவிட்டார். அந்த மாநாட்டுக்கு செல்லும்போது விபத்து நிகழ்ந்துவிட்டது. மாநாட்டுத் திடலிலேயே விஜய் ஆறுதல் தெரிவித்திருக்கலாம்.
தலைமைக் கழகத்தில் இருந்து ஒரு போன், ஒரு மெசேஜ் என எதுவும் வரவில்லை. இவ்வளவு நாள் அவர் உழைத்ததற்கு என்ன பலன் இருக்கிறது சொல்லுங்கள். உயிரிழந்த இருவரும் திருச்சியில் முக்கியமான நிர்வாகிகள். தலைவர் விஜய்யோ பொதுச்செயலாளரோ இதுவரை இரங்கலே தெரிவிக்கவில்லை. எங்களுக்கு இழப்பீடெல்லாம் தேவையில்லை. இரங்கல் கூட தெரிவிக்காதது வேதனையாக உள்ளது” என தெரிவித்திருந்தனர்.
மேலும், அவர்கள் பேசுகையில், “இறந்தவர்கள் திருச்சி மாவட்டத்தில் முக்கியமான நிர்வாகிகள். இது எப்படி விஜய்க்கு தெரியாமல் போயிருக்கும். இன்றைய ஸ்மார்போன் காலத்தில் எல்லோருக்கும் எளிதில் தகவல் போகும் போது விஜய்க்கு தகவல் எப்படி தெரியாமல் போயிருக்கும். தற்போது வரை ஒரு இரங்கல் கூட தெரியவில்லை. விஜய்யோ, என்.ஆனந்தோ வரவில்லை என்றாலும் உள்ளூர் நிர்வாகிகளாவது வந்திருக்கலாம். ஏன் நேற்று ஒரு 60 நொடிகள் மவுன அஞ்சலி செலுத்தி இருக்கலாம். ஒரு தொண்டனுக்கு இவ்வளவு தான் மரியாதையா?” என்று ஆதங்கமாக பேசினர்.
இத்தகைய சூழலில்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் உயிரிழந்த கலையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்துச் சென்றார்.