ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே காவிரி ஆற்றின் குறுக்கே சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மண் பாலத்தை வருவாய்துறையினர் அகற்றினர்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ளது கருவேலம்பாளையம் கிராமம். இங்கு ஈரோடு - நாமக்கல் மாவட்டங்களை இணைக்கும் வகையில் காவிரி ஆறு செல்கிறது. பொதுமக்கள் ஆற்றை கடக்க ஏதுவாக மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியோடு பரிசல் இயக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் இருந்து நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதிக்கு செல்ல வேண்டுமென்றால் பல கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். பேருந்து வசதி இருந்தாலும் கூட, ஆற்றில் பரிசல் மூலம் சென்றால் வேகமாகவே செல்ல முடியும் என்பதால் பெரும்பாலானவர்கள் பரிசல் பயணத்தையே வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவர் ரூபாய் ஆறு லட்சத்திற்கு பரிசல் உரிமம் எடுத்துள்ளார். இப்பகுதியில் அதிகமான மக்கள் பயணம் மேற்கொள்வதை அறிந்த அந்த நபர் தன்னுடைய அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி காவிரி ஆற்றின் நடுவே தரைப்பாலம் ஒன்றை அமைத்ததாக கூறப்படுகிறது. தமிழகமே தற்போது காவிரிக்காக போராடி வரும் நிலையில் ஒரு தனி நபர் சட்டவிரோதமாக ஆற்றின் நடுவே தரைப்பாலம் அமைத்து தண்ணீரின் ஓட்டத்தை தனது சுயநலனுக்காக தடுத்துள்ளார்.
காவிரி ஆற்றின் நடுவே கல்லையும், மண்னையும் கொண்டு சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட அந்த தரைபாலத்தில் நடந்து செல்வதற்கு கூட கட்டணம் வாங்கியுள்ளனர். முதலில் அந்த தரைப்பாலத்தை இரு சக்கர வாகன ஓட்டிகளே பயன்படுத்தி வந்துள்ளனர். பாலத்தை கடக்க இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.10 கட்டணமாக வசூலித்து வந்துள்ளனர். இப்பகுதியில் இருந்து விரைவாக பரமத்தி வேலூர் செல்லலாம் என்பதால் கார் ஓட்டிகளும் இப்பாலத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். கார்களுக்கு ரூ.50 கட்டணமாக வசூலித்துள்ளனர். சட்ட விரோதமாக அதிக கட்டணம் வசூலித்தாலும் கூட எளிதாக செல்ல வசதியாக இருந்ததால் மக்கள் இதை பொருத்துக்கொண்டு சென்றுள்ளனர்.
கோடைக் காலம் என்பதால் தற்போது காவிரியில் தண்ணீர் குறைவாக செல்கிறது. அப்பகுதியில் தற்போது வாகன எண்ணிக்கையும் அதிகரித்ததால் மேலும் ஒரு தரைப்பாலம் அமைக்க அந்த நபர் முடிவு செய்துள்ளார். இதற்கிடையில் இந்த தரைப்பாலம் குறித்து பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் மாவட்ட நிர்வாகத்தில் புகார் தெரிவித்திருந்தனர். எவ்வளவு புகார்கள் குவித்தாலும் தனது அரசியல் செல்வாக்கால் தனக்கும் தனது வருமானத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் அந்த நபர் பார்த்து வந்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டவர் மேலும் ஒரு தரைப்பாலம் அமைக்க முடிவு செய்து பொக்லைன் இயந்திரந்துடன் காவிரி ஆற்றுப்பகுதியில் தரைப்பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளார்.
இரண்டாவது பாலம் கட்டும் வேலைகள் நடந்து வந்த வேலையில், மாவட்ட நிர்வாகத்தில் புகார்கள் குவிய தொடங்கியது. இதனால் செய்வது அறியாமல் திகைத்த அதிகாரிகள் வேறு வழியின்றி பாலத்தை அகற்ற வேண்டிதாயிற்று. வேறு வழியின்றி சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் தரைப்பாலத்தை அகற்றினர். தரைப்பாலம் அமைக்க பயன்படுத்திய பொக்லைன் இயந்திரத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
பாலத்தை கடக்க இருசக்கர வாகனங்களுடன் வந்த பொதுமக்கள் வேறு வழியின்றி பரிசல்களில் தங்களது வாகனங்களை ஏற்றிக்கொண்டு அக்கறைக்கு சென்றனர். ஒருபுறம் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தரைப்பாலம் அமைக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்தாலும். இனி வரும் காலங்களில் எளிதாக அக்கறைக்கு செல்ல முடியாது என சிலர் புலம்பிக்கொண்டு சென்றனர்.