வாய் பேசமுடியாத மூதாட்டிக்கு தேடிவந்து இரத்த தானம் செய்த கண் பார்வை மாற்றுத் திறனாளி

வாய் பேசமுடியாத மூதாட்டிக்கு தேடிவந்து இரத்த தானம் செய்த கண் பார்வை மாற்றுத் திறனாளி
வாய் பேசமுடியாத மூதாட்டிக்கு தேடிவந்து இரத்த தானம் செய்த கண் பார்வை மாற்றுத் திறனாளி
Published on

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வாய் பேச முடியாத பெண்ணின் உயிரைக் காப்பதற்காக கண்பார்வையற்ற ஆசிரியர் ஒருவர் இரத்ததானம் வழங்கிய நிகழ்வு காண்போருக்கு வார்த்தைகளால் விவரிக்க முடியாத நெகிழ்வை ஏற்படுத்தியது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான சகுந்தலா(61) என்ற பெண்மணி உடல்நலக்குறைவால் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடலில் இரத்தத்தின் அளவு குறைவாக இருந்ததால் உடனடியாக இரத்தம் செலுத்தினால்தான் அவரது உயிரை காக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், இரத்தம் கேட்டு அவரது உறவினர்கள் பலரிடமும் உதவி கோரியுள்ளனர். புதுக்கோட்டையில் செயல்பட்டுவரும் குருதிக்கூடு என்ற தன்னார்வ அமைப்பிற்கு இந்த தகவல் வரவே அவர்களின் வாட்ஸ் அப் தளத்தில் சகுந்தலா என்ற வாய் பேச முடியாத பெண்ணின் உயிரைக் காக்க உடனடியாக இரத்தம் தேவைப்படுகிறது என்று பதிவிட்டுள்ளனர்.

இதனை அறிந்த செம்பாட்டூர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான சிவா என்பவர் தனது நண்பரும் ஆசிரியருமான வீரமாமுனிவர் மற்றும் குருதிக்கூடு அமைப்பினரின் உதவியோடு உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இரத்த தானம் செய்தார்.

இதனையடுத்து அவரிடமிருந்து பெறப்பட்ட இரத்தம் வாய் பேச முடியாத உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சகுந்தலா என்ற பெண்மணிக்கு உடனடியாக செலுத்தி அவருக்குத் தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ரத்த தானம் செய்ய தானாக முன்வந்து புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள இரத்த வங்கிக்கு வந்த தகவலை அறிந்த கல்லூரி முதல்வர் உள்ளிட்ட மருத்துவ குழுவினரும் அங்கு வந்து சிவாவை பாராட்டியதோடு தங்களது நன்றிகளையும் தெரிவித்தனர்.

இதுகுறித்து பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியரான சிவா கூறுகையில், “கண்பார்வையற்ற தமக்கு பலரும் பல்வேறு உதவிகளை செய்து வரும் நிலையில் தன்னால் முடிந்த உதவிகளை இந்த சமூகத்திற்கு செய்ய நினைத்தேன். அதன்படி இரத்தம் கிடைக்காமல் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் சகுந்தலா என்ற பெண்ணின் ரத்த வகையும் எனது இரத்த வகையும் ஒன்று என்பதால் உடனடியாக அவருக்கு உதவ முன்வந்து இரத்தம் வழங்கினேன். தொடர்ந்து இரத்தம் வழங்க தயாராக இருக்கிறேன். கண்பார்வையற்ற என்னால் பலரது வாழ்வில் ஒளியேற்ற முடியும் எனில் அந்த மகிழ்வே எனக்கு போதும்” என்று அவர் கண்ணீர் மல்க கூறினார்.

“புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் இரத்த தேவையை உடனடியாகப் பூர்த்தி செய்யும் நோக்கத்தோடு தான் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு குறுகிய காலம் தான் ஆகிறது என்றாலும் கடந்த 3 மாதத்தில் மட்டும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டுமே சுமார் 350க்கும் மேற்பட்டோர் இதுவரையில் இரத்ததானம் செய்துள்ளனர். இன்று கண்பார்வையற்ற ஆசிரியர் சிவா வாய் பேச முடியாத சகுந்தலா என்ற முகம் தெரியாத பெண்மணிக்கு இரத்ததானம் வழங்கியிருப்பது எங்களது அமைப்பிற்கு அளவிட முடியாத மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது” என்றார்.

இதுகுறித்து மருத்துவ கல்லூரி முதல்வர் பூபதி கூறுகையில், “புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டுவரும் இரத்த வங்கியில் வாரம்தோறும் இரத்ததான முகாம்கள் நடைபெற்று வருகிறது. அதேபோல் பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் தானாக முன்வந்து ரத்ததானம் வழங்கி வருகின்றனர். இருந்த போதிலும் இன்று கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மற்றொரு மாற்றுத்திறனாளியின் உயிரைக் காக்க உரிய நேரத்தில் இரத்ததானம் செய்திருப்பது எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய தோடு அவருக்கு மருத்துவ குழுவினர் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். மற்றவர்களுக்கு முன் உதாரணமாக சிவா திகழ்ந்துள்ளார். இதனைப் பார்த்தாவது இனிவரும் காலங்களில் அனைவரும் இரத்ததானம் செய்ய முன்வரவேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உரிய நேரத்தில் உயிர்களைக் காக்க இரத்ததானம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து அரசு பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும் பெரும்பாலானோர் இன்னும் இரத்ததானம் செய்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டையில் கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளி ஒருவர் தன்னார்வத்தோடு வந்து வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி ஒருவருக்கு குறித்த நேரத்தில் குருதிக்கொடை அளித்து அவரது உயிரைக் காக்க உதவிய நிகழ்வு காண்போரை கேட்போரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது. சிவாவின் இந்த செயல் கண்களில் பார்வை இல்லை என்றாலும் அவரின் இதயத்தில் ஈரம் இருப்பைதை உலகிற்கு உணர்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com