நாடு முழுவதும் தீபாவளியை பலகாரங்கள், பட்டாசுகள், புத்தாடைகளுடன் கொண்டாட நாட்டு மக்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கும் வேளையில், இவையெல்லாம் இல்லாமல் பறவைகள் இனத்திற்காக வேட்டங்குடி கொள்ளும்படி பட்டி கிராம மக்கள் தங்களுடைய தீபாவளி சந்தோஷங்களை தவிர்த்து வாழ்ந்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து மதுரை செல்லும் வழியில் 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது வேட்டங்குடி கிராமம். இக்கிராமத்தில் சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில் மிகுந்த அழகுடன் ரம்மியமான இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் கண்மாய் அமைந்துள்ளது.
இந்த கண்மாய்க்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் வரை ஆஸ்திரேலியா, ஐரோப்பா, தாய்லாந்து, பர்மா, நேபாள், சீனா, மலேசியா போன்ற நாடுகளில் இருந்து சுமார் 2000-க்கும் மேற்பட்ட பறவைகள் தனது இனப்பெருக்கத்திற்காக வருகை தரும்.
அப்படி வரும் பறவைகள் ஆறு மாதத்திற்கு மேல் தங்கி இனப்பெருக்கத்தை முடித்துக் கொண்டு தனது குஞ்சுகளுடன் சொந்த நாடுகளுக்கு திரும்பிச் செல்லும். இச்சூழ்நிலையில்,கொள்ளு குடிபட்டி கிராம மக்கள் பறவைகளை தங்களது சொந்த குழந்தைகள் போல் கருதி, அவைகள் கேட்டால் அச்சமடையும் வெடிச் சப்தங்களை தவிர்க்க முடிவெடுத்து, கடந்த 40 ஆண்டு காலத்திற்கு மேலாக தீபாவளி பண்டிiகையை கொண்டாடாமல் தவிர்த்து வருகின்றனர்.
தீபாவளி மட்டும் அல்லாமல் எந்த துக்க, சுப விசேஷங்களுக்கும் பட்டாசு வெடிப்பதில்லை என முடிவெடுத்து தாங்கள் மட்டும் இல்லாமல் தங்கள் குழந்தைகளையும் இந்த நடைமுறையை கடைபிடிக்க செய்துள்ளனர். நாடு முழுவதும் தீபாவளியை வெடிசத்தத்துடன் கொண்டாடி மகிழும் மக்களிடையே பறவைகளுக்காக தீபாவளி கொண்டாட்டத்தை விட்டுக் கொடுத்து வாழும் கொள்ளுகுடிபட்டி கிராம மக்கள் மனிதநேயத்தில் தலை நிமிர்ந்து நிற்கின்றனர்.