அபராதமாக 12 லட்சம் வசூல்: தென்னக ரயில்வே அதிரடி
தமிழகத்தில் ரயிலில் டிக்கெட், முறையான பயணம் மேற்கொள்ளாத பயணிகளிடம் இருந்து சுமார் 12லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை எழும்பூர், சென்னை சென்ட்ரல் மற்றும் மதுரை இரயில் நிலையங்களில் தென்னக ரயில்வே சார்பில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்த தீவிர சோதனைக்கு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த கண்காணிப்பில் டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணித்த 198 பேர் பரிசோதிக்கும் பகுதியில் சிக்கியுள்ளனர்.இவர்களிடம் இருந்து 1,98,817 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. பிளாட்ஃபாம்களில் நடத்தப்பட்ட சோதனையில் 32 டிராலிகள் மற்றும் அங்கீகாரமில்லாத பார்சல்கள் கைப்பற்றி ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தென்னக ரயில்வேக்கு உட்பட்ட பகுதியில் சிறப்பு படையினர் 120 ரயில்களில் சோதனை நடத்தினர். இதில் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணித்ததாக 1474 வழக்குகளும், ஒழுங்கற்ற பயணம் மேற்கொண்டதாக 1062 வழக்குகளும், அங்கீகாரம் இல்லாமல் டிக்கெட் பரிமாற்றம் செய்ததாக 48 வழக்குகளும், பதிவு செய்யாமல் சாமான்கள் கொண்டு வந்தது 29 வழக்குகளும் பதியப்பட்டுள்ளது. 36 அங்கீகாரம் இல்லாத விற்பனையாளர் இந்த சோதனையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.இதன் மூலம் 12,74,035 ரூபாய் கட்டணம் மற்றும் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.