ஏழை மக்கள், வருமானம் ஈட்ட கஷ்டப்படுபவர்கள் என வருவாய் இல்லாதவர்கள் பயனடையும் விதத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது தொடங்கிய திட்டம் அம்மா உணவகம். வெளிநாடுகளும் கூட வியந்து பார்த்து பாராட்டிய திட்டம். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இதனை அமல்படுத்த எண்ணி, அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். ராஜஸ்தான் முதல் ஆளாய் அறிமுகம் செய்தது. கர்நாடகா இந்திரா கேண்டின் என்றது. டெல்லி ஆம் ஆத்மி கேண்டின் என்றது. இப்படி பல மாநிலத்தில் அம்மா உணவகம் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
2015 பொங்கல் விழா சமயத்தில் டெல்லியில் உள்ள தமிழக இல்லத்தில் அம்மா உணவகம் 3 நாட்களுக்கு திறக்கப்பட்டது. டெல்லிவாசிகள் பெரிதும் புகழ்ந்து தள்ளினர். இந்நிலையில் தமிழக பட்ஜெட் 2018-19 நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறு அம்சங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார் நிதித்துறை செயலாளர். அப்போது பல இடங்களில் அம்மா உணவகம் மூடப்படுகிறதே என்ன காரணம் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நிதித்துறை செயலர், அம்மா உணவகத்துக்கு அரிசி இலவசம். மற்ற பொருட்கள் பொது விநியோக திட்ட விலையில் கொடுக்கப்படுகிறது. திட்டத்தின் தொடக்கத்தில் நஷ்டம் ஏற்படாது என்று சொன்னார்கள். இப்போது நஷ்டம் வந்து விட்டது என்கிறார்கள். உள்ளாட்சி அமைப்புகளே நிர்வகிக்கிறார்கள். நஷ்டம் குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்து வருகிறார். நஷ்டம் ஏற்பட்டதால் சில உணவகங்கள் மூடப்பட்டது என்றார்.
ஏழைகளும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் எந்த இலாபமும் பார்க்காமல் சில இடங்களில் மட்டும் தொடங்கி பின்னர் சென்னை முழுக்க உடனடியாக விரிவுபடுத்தப்பட்ட திட்டம் அம்மா உணவகம். ஆனால் இலாபம் இல்லை என்று பல இடங்களில் அது மூடப்பட்டுள்ளது.