அமித் ஷாவின் தமிழக வருகையை எதிர்த்தும் ஆதரித்தும் 'ஹேஷ்டேக் யுத்தம்'!

அமித் ஷாவின் தமிழக வருகையை எதிர்த்தும் ஆதரித்தும் 'ஹேஷ்டேக் யுத்தம்'!
அமித் ஷாவின் தமிழக வருகையை எதிர்த்தும் ஆதரித்தும் 'ஹேஷ்டேக் யுத்தம்'!
Published on

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழக வருகையை எதிர்த்தும் ஆதரித்தும் சமூக வலைதள ட்ரெண்டிங்கில் ஹேஷ்டேக் யுத்தம் நடந்து வருகிறது.

டெல்லியில் இருந்து புறப்பட்டு இன்று (சனிக்கிழமை) பிற்பகலில் சென்னை வரும் அமித் ஷா மாலை 4.30 மணி அளவில் கலைவாணர் அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்துகிறார். பின்னர், அதிமுக மற்றும் பாரதிய ஜனதா நிர்வாகிகளுடனும் அவர் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையின்போது கூட்டணி குறித்து அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல்வேறு அரசுத் திட்டங்களைத் துவக்கிவைக்க வரும் அமித் ஷாவின் இந்த பயணம், தமிழகத் தேர்தல் அரசியல் களத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்த நிலையில், ட்விட்டரில் இன்று காலையிலிருந்தே அமித் ஷாவின் வருகை தொடர்பான கருத்துகளை நெட்டிசன்கள் பதியத் தொடங்கிவிட்டனர். இதையடுத்து, அமித் ஷாவைக் குறிக்கும் ஹேஷ்டேகுகள் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகத் தொடங்கின.

குறிப்பாக, அமித் ஷாவின் வருகையை எதிர்த்து சில தரப்பினரும், ஆதரித்து வேறு சில தரப்பினரும் பதிவுகளைக் கொட்டி வருகின்றனர்.

ட்விட்டரில் அமித் ஷா வருகையை எதிர்க்கும் #GoBackAmitShah எனும் ஹேஷ்டேக், காலை 10.15 மணியளவில் 1 லட்சத்து 90 ஆயிரம் ட்வீட்களுடன் தேச அளவில் முதலிடத்தை வகித்தது. அதேவேளையில், #TNwelcomesamitshah என்ற ஹேஷ்டேக் 93 ஆயிரம் பதிவுகளுடன் தேசிய அளவில் இரண்டாம் இடத்தில் ட்ரெண்டிங்கில் இருந்தது. அதேபோல், #TNwelcomeschanakya என்ற ஹேஷ்டேகிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ட்வீட்கள் கொட்டப்பட்டிருந்தன.

சமூக வலைதளங்களில் வெறும் கருத்துப் பதிவுகளோடு மட்டுமில்லாமல், இந்த ஹேஷ்டேகுகளில் மீம்ஸ்களும் பகிரப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் மக்கள் பிரச்னைகளுக்கு மத்திய பாஜக அரசு இதுவரை கண்டுகொள்வதில்லை; இந்தித் திணிப்பு விவகாரம், நீட் உள்ளிட்ட பிரச்னைகள் முதலானவற்றை முன்வைத்து அமித் ஷா எதிர்ப்புப் பதிவுகளில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதேவேளையில், மத்திய அரசின் சாதனைகளை முன்வைத்து அமித் ஷாவுக்கு ஆதரவான பதிவுகளில் கருத்துகள் இடம்பெற்றுள்ளன.

சமீப காலமாக அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் ஐ.டி விங்-குகள் சமூக வலைதளங்களில் தீவிரமாக தேர்தல் வியூகத்தை வகுத்து வரும் நிலையில், அமித் ஷா வருகையையொட்டிய ஹேஷ்டேக் யுத்தத்தில் அவர்களின் பங்களிப்பும் மிகுதியாக இருப்பதாகவே தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com