ஆம்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அலட்சியம் காரணமாக கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட 2 வது வார்டு ஜலால் பேட்டை பகுதியை சேர்ந்தவர் அப்துல் சலாம் என்பவரின் மனைவி கைருன்னிஷா (69). இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்பட்டதில், தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து கைருன்னிஷா இம்மருந்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை கைருன்னிஷா உயிரிழந்துள்ளார். இதைத் தொடர்ந்து பிற்பகல் வரையில் உயிரிழந்த கைருன்னிஷாவின் உடலை கொரோனா வார்டிலேயே வைத்திருந்துள்ளனர்.
பின்னர் அரசு மருத்துவமனை ஊழியர் நோய்த்தடுப்பு உடையை அணிந்து கொண்டு கொரோனா வார்டில் இருந்த கைருன்னிஷாவின் பிரேதத்தை எடுத்துக்கொண்டு பிரேத பரிசோதனை அறைக்கு கொண்டுசெல்லும் போது, உயிரிழந்த கைருன்னிஷாவின் உறவினர் எவ்வித பாதுகாப்பு உடையும் கையுறையும் அணியாமல் ஸ்டிச்சரை தள்ளிச் சென்று பிரேத பரிசோதனை அறையில் வைத்துள்ளார்.
தமிழக அரசு கொரோனா நோய் தடுப்பு பிரிவிற்கு உரிய மருத்துவர்களையும் செவிலியர்களையும் சுழற்சி முறையில் பணியில் அமர்த்தி இனி வருங்காலங்களில் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படாமல் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை பாதுகாக்க முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .