இதய பாதிப்புக்குள்ளான குழந்தை சிகிச்சைக்காக 4 மணி நேரத்தில் திருச்சியில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்டது. வாட்ஸப் குழு மூலம் 15 ஆம்புலன்ஸுகள் இணைந்து குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளன.
திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தைக்கு இதய பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு செல்லும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக குழந்தையை கொண்டு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது.
உடனடியாக நவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் ஒன்று தயார் செய்யப்பட்டது. சென்னைக்கு விரைந்து செல்ல வேண்டியதன் அவசியம் குறித்த தகவல் அனைத்து ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அடங்கிய வாட்ஸப் குழுவில் பகிரப்பட்டது. அனைவரும் குழந்தைக்கு உதவ முன்வந்தனர். திருச்சி - சென்னை இடையே ஆங்காங்கே 15 ஆம்புலன்ஸுகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டன.
குழந்தை இருந்த ஆம்புலன்ஸுக்கு முன்பாக மற்றொரு ஆம்புலன்ஸ் சென்று அதற்கு வழி ஏற்படுத்தியது. இப்படி ஒன்று மாற்றி ஒன்றாக வழியில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸுகள் குழந்தை இருந்த ஆம்புலன்ஸுக்கு முன்னே சென்று வழி ஏற்படுத்தின. மின்னல் வேகத்தில் சாலையில் சீறிப்பாய்ந்த ஆம்புலன்ஸ் திருச்சி - சென்னை இடையேயான 330 கிலோ மீட்டர் தொலைவை 4 மணி நேரம் 10 நிமிடத்தில் கடந்து குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தது. குழந்தையின் உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.