பல் பிடுங்கப்பட்ட விவகாரம்: FIR-ல் வெளியான அதிர்ச்சி தகவல்கள்.. வழக்கு CBCID-க்கு மாற்றம்!

தங்களை ஆடைகள் இல்லாமல் நிற்க வைத்து ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் மற்றும் சக காவலர்கள் கொடுமையாக தாக்கியதாகவும், வலுக்கட்டாயமாக தங்களது பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாகவும் பாதிக்கப்பட்ட சுபாஷ் தெரிவித்துள்ளார்.
Amudha IAS, Balveer singh
Amudha IAS, Balveer singhFile picture
Published on

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் ஏ.எஸ்.பி.யாக இருந்த பல்வீர் சிங், விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வை ஏற்படுத்தியது.

விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் மீது பதிவுச் செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த விவகாரத்தில் பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுபாஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். அதன்படி இந்திய தண்டனைச் சட்டம் 323, 324, 326, 506(பகுதி 1) ஆகிய பிரிவுகளின் கீழ் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

Sylendra Babu - Amudha
Sylendra Babu - Amudha

அதில் தங்களை ஆடைகள் இல்லாமல் நிற்க வைத்து ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் மற்றும் சக காவலர்கள் கொடுமையாக தாக்கியதாகவும், வலுக்கட்டாயமாக தங்களது பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாகவும் பாதிக்கப்பட்ட சுபாஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு தாங்கள் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் காவல்துறையினர், வழக்கறிஞர்களுடன் பாபநாசம் கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறியுள்ள சுபாஷ், அங்கு விடுதி ஒன்றில் வைத்து தாங்கள் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டதாக எழுதி வாங்கி போலி ஆவணங்களை தயாரித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த விவரங்களை யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என கூறி வழக்கறிஞர்கள் மூலம் மருத்துவச் செலவிற்கு பணம் கொடுத்ததாகவும், மீறி கூறினால் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து விடுவதாக காவலர்கள் மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட சுபாஷ் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரியான அமுதா விசாரணை நடத்தினார். பாதிக்கப்பட்டவர்கள் பலரும் முன்வந்து விசாரணை அதிகாரி அமுதாவிடம் வாக்குமூலம் அளித்தனர். அதனைத் தொடர்ந்து அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் அவர் நேரில் ஆய்வு செய்தார். இந்த நிலையில் விசாரணை அதிகாரி அமுதாவின் பரிந்துரையை ஏற்று, விசாரணை கைதிகளின் பற்கள் விடுங்கப்பட்ட வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com