உடுமலை அருகே அமராவதி அணையிலிருந்து 9 கண் மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மழைகளில் பெய்துவரும் கனமழையால் அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து 4491 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 89.51 அடியை கடந்துள்ளது.
அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி 9 கண் மதகுகள் வழியாக ஆற்று மதகுகளில் இருந்து 3867 கன அடியும் அமராவதி பிரதான கால்வாயில் இருந்து 400 கன அடி நீரும் உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. மேலும் மழை அதிகரித்தால் நீர்வரத்து அதிகரிக்கும். அப்போது உபரிநீர் வெளியேற்றமும் அதிகரிக்கும் என பொதுப்பணித்துறையினர் தெரிவிக்கின்றனர்.
எனவே அமராவதி கரையோர கிராம மக்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கோ அல்லது மீன்பிடிக்கவோ, குளிக்கவோ ஆற்று பகுதிக்கோ செல்ல வேண்டாம் என வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணை பகுதியில் 10மிமீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.