பிளாஸ்டிக் தடையை முன்னிட்டு திருநெல்வேலி டவுனில் அல்வா கடைகள் பழங்கால முறையில் ஓலைப்பெட்டிக்கு மாறியுள்ளன.
பிளாஸ்டிக் எனப்படும் நெகிழி பொருட்களை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை நாளை முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி உணவுப் பொருள்களை கட்ட பயன்படுத்தப்படும் நெகிழி தாள், நெகிழிகளால் ஆன தெர்மாகோல் தட்டுகள், நெகிழி பூசப்பட்ட காகிதக் குவளைகள், நெகிழி குவளைகள், நீர் நிரப்ப பயன்படும் கப், நெகிழி பொட்டலங்கள், நெகிழி தூக்கு பைகள், நெகிழி கொடிகள், நெகிழி விரிப்புகள், நெகிழி பூசப்பட்ட காகிதத் தட்டுகள், நெகிழி தேநீர் குவளைகள், நெகிழி உறிஞ்சு குழல்கள், நெகிழி பூசப்பட்ட பைகள், நெய்யாத நெகிழி பைகள் போன்ற 14 வகையான நெகிழி பொருள்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன. இதனை முற்றிலும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் நெகிழிகளுக்கு மாற்றாக வாழை இலை, பாக்குமர இலை, அலுமினியத்தாள், காகிதச் சுருள், தாமரை இலை ஆகியவற்றை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கண்ணாடி, உலோகத்தால் ஆன குவளைகள், மூங்கில், மரப்பொருள்கள், காகித குழல்கள், துணி, காகிதம், சணல் பைகள், காகித மற்றும் துணிக் கொடிகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், பீங்கான் பாத்திரங்கள், மண் கரண்டிகள், மண் குவளைகளை பயன்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தடையை மீறி நெகிழி பொருள்களைதயாரித்தாலோ, விற்பனை செய்தாலோ அதனை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிளாஸ்டிக் தடையை முன்னிட்டு திருநெல்வேலி டவுனில் அல்வா கடைகள் பழங்கால முறையில் ஓலைப்பெட்டிக்கு மாறியுள்ளன. நெகிழிக்கு பதிலாக ஓலைப்பெட்டியில் வைத்து அல்வா விற்கப்படுகின்றன. மேலும் வண்ணார்பேட்டை தேநீர் கடையில், பார்சல் டீ வாங்க வருவோருக்கு பாத்திரம் வழங்கப்படுகிறது. பாத்திரத்திற்கு 200 ரூபாய் வசூல் செய்யப்பட்டு திரும்பி கொடுக்கும்போது பணமும் திரும்பி கொடுக்கப்படுகின்றது. காய்கறி வாங்க வருவோரிடமும் துணைப்பைகள் எடுத்து வருமாறு அறிவுறுத்தப்படுகிறது. நெல்லை டவுண் காய்கறிச் சந்தையில் துணிப்பைகள் மட்டுமே வழங்கப்படுகின்றன.