நாமக்கல்லில் அமைச்சர் உதயநிதி பங்கேற்ற அரசு விழாவிற்கு எவ்வித அனுமதியும் பெறாமல் மின்சாரம் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நாமக்கல் அடுத்த பொம்மகுட்டை மேட்டில் அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில், மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு 678 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
இதனையொட்டி பொம்மகுட்டை மேடு அருகே உள்ள காலி இடத்தில் பொதுப் பணித்துறை சார்பில் பிரம்மாண்ட விழா பந்தல் அமைக்கப்பட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்காக அருகில் இருந்த மின்வாரியத்திற்கு சொந்தமான மின் கம்பத்திலிருந்து மின்சாரம் திருடப்பட்டது தெரிய வந்துள்ளது. மின் கம்பத்திலிருந்து நேரடியாக ஒயரை மாட்டி மின்சாரத்தை எடுத்து வந்து விழாவிற்கு பயன்படுத்தியதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மின் திருட்டு குறித்து மின்வாரிய கண்காணிப்பு பொறியாளரிடம் நாம் கேட்டபோது, “அரசு விழாவிற்கு மின்வாரியத்தில் இருந்து எவ்விதமான தற்காலிக மின் இணைப்பும் வழங்கப்படவில்லை. மின் திருட்டு தொடர்பாக உடனடியாக விசாரிக்கப்படும்” என தெரிவித்தார்.